ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட குமரிப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! | Madurai hc bench directs kumari collector to give one lakh rupees compensation to acid attack survivor

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (24/01/2019)

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட குமரிப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

ஆசிட் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திங்கட்கிழமைக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரிஜா

மதுரையைச் சேர்ந்த சஹா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``கடந்த ஜனவரி 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிரிஜா என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. கணவனை இழந்த அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியபோது அவர் மறுத்ததால் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்றோஸ் என்பவர் முகத்தில் ஆசிட் வீீசியுள்ளாார். இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியபோது, இதுவரை அவருக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரியவந்தது. பாதிக்கப்பட்டோர் நிவாரணத் திட்டத்தின்படி ஆசிட் வீச்சு சம்பவத்தில் முகம் சிதைந்து போனால் அவர்களுக்கு 8 லட்சம் முதல்10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். 

ஆசிட் வீச்சு

அந்த வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அவருக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், சிறந்த சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் திங்கட்கிழமைக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க குமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், தமிழக சட்ட சேவை மையத்தின் உறுப்பினர் செயலர் ஜனவரி 28-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28-ம் தேதி ஒத்திவைத்தனர்.