இடைக்கால உத்தரவு இல்லை! - ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் | Sterlite plant reopening case: SC refuses to pass interim orders

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:08 (24/01/2019)

இடைக்கால உத்தரவு இல்லை! - ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது. விசாரணை முடிவில் சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

உச்ச நீதிமன்றம்

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும் தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா புகார் மனு தாக்கல் செய்தது. 

இன்று நடந்த விசாரணையின்போது ஆரம்பத்தில் ஸ்டெர்லைட்டைத் திறக்கவும் உடனடியாக மின்சாரத்தைக் கொடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடும் என்று வேதாந்தா தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் வழக்கு அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (ஜனவரி 29) ஒத்திவைக்கப்பட்டது.  

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை இன்னும் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் கொடுப்பதன் செயல்பாடுகளைத் துவக்கி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும் என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மின்சாரம் கொடுக்கப்படாமல் அவர்கள் எப்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வார்கள் எனத் தமிழக அரசிடம் நீதிபதி நாரிமன் கேட்டார். அதற்குத் தமிழக அரசு தரப்பில் ஆலை வெளியில் பூட்டியது போல இருந்தாலும் உள்ளே 250 பேர் இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டது. இதற்கிடையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் மனுதாரராக இணைந்துகொண்டார். அவரது வாதத்தின்போது வைகோ பலத்த குரலில் பேசியதற்காக நீதிமன்றத்தில் சத்தமாக பேசாதீர்கள். அமைதியாகப் பேசுங்கள் என்றார் நீதிபதி நாரிமன்.

காவல்துறையினர் உதவியுடன் ஸ்டெர்லைட்டைத் திறக்க மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க இருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணை இறுதியில் முறையான இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.