‘குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புத்தகப் பைகள்!’- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? | Government school bags spotted in trash near kanchipuram

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (25/01/2019)

கடைசி தொடர்பு:10:40 (25/01/2019)

‘குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புத்தகப் பைகள்!’- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழக அரசால் மாணவர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த புத்தகப் பைகள் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பையில் வீசப்பட்ட தமிழக அரசின் புத்தகப் பை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ல் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் தமிழக அரசின் முத்திரையும் இடம் பெற்றிருந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் தமிழக அரசின் முத்திரைக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி படமும் இடம் பெற்றுவந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரம்புரம்  நடுநிலைப்பள்ளிக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில்  பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்பட வைக்கப்பட்டிருந்த பைகள் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலவச புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருந்ததை அந்தப் பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. இதனால், பைகளை மாணவர்களுக்குக் கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம் எனச் சொல்கிறார்கள். ``கோடிக்கணக்கில் வரிப்பணத்தைக் கொண்டு மாணவர்களுக்காகத் தமிழக அரசு இலவசத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் இலவச புத்தகப் பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜை தொடர்ப்புக்கொண்ட போது, இந்த விவகாரம் தொடர்பாக  அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க