ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு - மகன், மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்! | Valparai: Social activist protest against Jacto Geo strike

வெளியிடப்பட்ட நேரம்: 21:08 (24/01/2019)

கடைசி தொடர்பு:21:29 (24/01/2019)

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு - மகன், மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்!

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வால்பாறையில் மகன், மகளுடன் சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அஜீஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக ஆங்காங்கே புகார் எழுந்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக ஆர்வலர் அஜீஸ் மஸ்தான் என்பவர், அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தன் மகள் அஜ்மிகா மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல் ஆகியோருடன், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அஜீஸ், ``இரண்டு நாள்களாக ஆசிரியர்களைக் காணவில்லை. வால்பாறை அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். எம்.எல்.ஏ, எம்.பி என அனைவரிடமும் பேசினேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்றனர். குரு எங்கே போனார்? 50,000, 75,000 சம்பளம் வாங்கிவிட்டு, அது பத்தவில்லை என்று போராடினால் எப்படி? 

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஆசிரியர்கள் மதிப்பதில்லை. அவர்கள் போராடினால் வயலன்ஸ் இல்லை. நான் போராடினால் மட்டும் வயலன்ஸா? என்ன ஆனாலும் சரி, அவர்கள் போராட்டத்தை கைவிடும் வரை, நானும் போராட்டத்தைக் கைவிட மாட்டேன்” என்றார் உறுதியாக.

போராட்டம்

இதனிடையே, அஜீஸை கைது செய்த போலீஸார், அதற்கு எதிர்ப்பு அதிகரித்ததால், சிறிது நேரத்தில் அவரை விடுவித்துவிட்டனர்.