``குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புகிறார்கள்!” -கொதிக்கும் பியூஸ் மனுஷ் | bjp attacking piyush manush family

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (24/01/2019)

``குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புகிறார்கள்!” -கொதிக்கும் பியூஸ் மனுஷ்

சுற்றுசூழல் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் பற்றி அவதூறு பரப்பும் மீம்ஸ் சமீபத்தில் அதிகம் சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவரையும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்யும் வகையில் காணொளி ஒன்று பரவியது. இதுகுறித்து பியூஷ் மானுஷ்விடம் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறியதாவது:  

``இன்று காலைதான் என்னையும் என் குடும்பத்தைப் பற்றியும் இழிவாகவும் பொய்யாகவும் சித்திரித்த அந்தக் காணொளியைப் பார்த்தேன். அவற்றைக் கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு தமிழ் படிக்க வராது. அவதூறு பரப்பும் மீம்ஸ்களைப் படிக்க கொஞ்சம் நேரமானது. இவ்வாறு என்மீது அவதூறு பரப்பும் வேலையை பி.ஜே.பி ஆட்களும் இந்துத்துவா அமைப்பின் ஆட்களும் தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளனர். இதுநாள் வரை என் மனைவிக்கு இவை தெரியவந்ததில்லை அவருக்கு அவ்வளவாகத் தமிழ் தெரியாது. இன்று அந்தக் காணொளி வந்த பின்னர்தான் என் மனைவிக்கு இந்த விஷயங்கள் தெரிய வந்தது, அவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.  

பியூஷ் மானுஷ்

இப்போதெல்லாம் இது பி.ஜே.பி-யின் ஒரு டிரெண்ட்டாக ஆகிவிட்டது. நீங்கள் அவர்களை எதிர்த்துப் பேசினால் உங்கள் வீட்டிலுள்ள பெண்களைத் தாக்குகிறார்கள். நாங்கள் நிறைய கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கோம். ஆனால், யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்ததில்லை. சமீபத்தில் நான் பி.ஜே.பி நிர்வாகி ஒருவரிடம் தொலைபேசியில் அழைத்து 'பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா மீது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது, பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருடன் எப்படி பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அப்போது அவர் என்னை `ஆண்டி நேஷனல்’ என்றெல்லாம் கூறி திட்டிவிட்டு பதில் சொல்லாமல் கட் செய்துவிட்டார். அந்த ஆடியோ வைரல் ஆனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அனாமதேய அழைப்புகள் மூலம் என்னைக் கண்டபடி கேவலமாகத் திட்டினார்கள். அதன் பின்னர்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அவர்கள் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஒருவர்  என் குடும்பத்தைப் பற்றி தவறாக சித்திரித்த அந்தக் காணொளியை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

நடிகை நிலானி என்பவர் 4 மாதங்களுக்கு முன் பேசிய ஆடியோவை எடிட் செய்து என் மனைவி பேசியதுபோல சித்திரித்து அவதூறு பரப்பியுள்ளார்கள். இதை எந்த அடிப்படையில் அவர் செய்தார்? இது குறித்து சேலம் கமிஷனருக்கு மெயில் மூலம் புகார் அளித்துள்ளேன். நாளை 10 மணிக்கு சேலம் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் என் மனைவியுடன் சென்று புகார் கொடுக்க உள்ளேன்’’ என்றார்.