`மோசடி நிலையங்களான அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்!’ - வேதனையில் டெல்டா விவசாயிகள் | Delta farmers alleges corruption in paddy direct purchase stations

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:07:05 (25/01/2019)

`மோசடி நிலையங்களான அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்!’ - வேதனையில் டெல்டா விவசாயிகள்

`தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்த்திட வேண்டும்’ என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாசிலாமணி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Paddy

இதுகுறித்து பேசிய மாசிலாமணி, ``கஜா புயல் பாதிப்பில் தப்பிப் பிழைத்து, அறுவடையாகி வரும் நெல்லை, கொள்முதல் செய்ய தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட அரசுக்கு ஆர்வமில்லை. திறக்கப்பட்ட  சில இடங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. சாக்குகள் தேவையான எண்ணிக்கையில் கொடுக்கப்படவில்லை. நாளொன்றுக்கு 700 சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கமிஷன் கொடுத்தால்தான் அவர்களது நெல்  கொள்முதல் செய்யப்படும். இப்படியெல்லாம் அரசு கொள்முதலில் நடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எதிர்த்துக் கேட்டால் 'மேலிடம்  வரை கமிஷன் போகிறது' எனப்  பணியாளர்கள் கூறுகிறார்களாம்.

மேலும், சில நியாயங்களையும் சொல்கிறார்கள். `சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வெளியில் வழங்கும் கூலியைவிட இங்கு மிகக் குறைவாக  கொடுக்கப்படுகிறது. மூட்டைகளை எடுக்க வரும் லாரிகளுக்கு மாமூல் கொடுக்கவேண்டியுள்ளது. இல்லையெனில் இடம் காலியாகாமல் மேலும் கொள்முதல் செய்யமுடியாது. டெமேரேஜ் என தண்டத்தொகை  போடப்படுவதால் அதையும் பணியாளர்கள்தான் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன்  ஊர் இடத்துக்கு, கோவிலுக்கு, கட்சிகளுக்கு என முக்கிய பிரமுகர்கள்  பணம்  கேட்கிறார்கள். அவர்களுக்கும் தரவேண்டியுள்ளது' என புலம்புகிறார்கள். 

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெளியேயிருந்து வரும் நெல் வியாபாரிகள், கமிஷன்  பணம் அதிகமாகக் கொடுப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை  தருகிறார்கள். நெல் விற்ற தொகையை இ.சி.எஸ். மூலம் பணம் வழங்கும் ஏற்பாடே கமிஷனை ஒழிப்பதற்குத்தான்.  ஆனால், இதன்பின்னும் ஏன் ஊழல் தொடர்கிறது?. 

Paddy

இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய, `சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வெளியில் வழங்கப்படும் கூலியைப் போல் இரட்டிப்பாக வழங்கிட வேண்டும். 17 சதம் ஈரப்பதம் என்பதை 21 சதம் என்று அனுமதிப்பதுடன்  டெமரேஜ் விதிக்காமல் இதைக் கொள்முதல் கால இழப்பாக  கணக்கில் கொள்ள வேண்டும். லாரிகளுக்கான மாமூலை காண்ட்ராக்ட்லேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். வெளிமாவட்டங்களில் பெயரளவுக்கு அரசு கொள்முதல் செய்வதை மாற்றி, அங்குள்ள நெல் இங்கு வராத அளவுக்கு கூடுதல் நிலையங்களை அங்கு திறந்திட வேண்டும். மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே பணியாளர்களுக்கு வேலை  என்பதால் அவர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இதனால் ஆகும் கூடுதல் செலவை சரிகட்ட சேமிப்புக் கிடங்குகளில் ஏற்படும் இழப்பைக் குறைக்க வேண்டும். நெல் அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் அளவை  குறைத்து, கொள்முதல் செய்யும் மாவட்டங்களிலேயே அரவை செய்தால் கூடுதல் போக்குவரத்துச் செலவு குறையும். இம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும். மேலும், உரிய தேவையின்படி கொள்முதலை செய்யவில்லையெனில், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.