நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? - பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்த விஜயகாந்த் | DMDK Forms panel for lok sabha election seat sharing

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:07:08 (25/01/2019)

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? - பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்த விஜயகாந்த்

2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தே.மு.தி.க சார்பில் 5 பேர் கொண்டு குழுவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அமைத்துள்ளார்.

விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தி.மு.க தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை தி.மு.க பொருளாளர் அன்பழகன் அமைத்துள்ளார். அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அமையலாம் எனத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் வேளையில், ‘தேர்தல் அறிவிப்பு வந்தால் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்போம்’ என எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை விஜயகாந்த் நியமித்துள்ளார். அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, கழக துணைச் செயலாளர் ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

தே.மு.தி.க அறிக்கை

உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 2014 முதல் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் விஜயகாந்த். இதன் தொடர்ச்சியாகக் கடந்த டிசம்பர் 18-ம் தேதி, அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். தே.மு.தி.க கட்சிக் கூட்டங்கள், விழாக்கள் என அவரின் மகன் விஜய பிரபாகரன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தமிழகம் திரும்ப இன்னும் கூடுதல் நாளாகலாம் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க