காலநிலை மாற்றப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு - இந்தியாவின் வன மனிதர் ஜாதவ் பேயங் | India's forest man Jadav Payeng speech in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (24/01/2019)

கடைசி தொடர்பு:07:23 (25/01/2019)

காலநிலை மாற்றப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு - இந்தியாவின் வன மனிதர் ஜாதவ் பேயங்

காலநிலை மாற்றம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இயற்கை தினம், பூமி தினம் போன்ற நாள்களில் தான், நாம் மரம் நடுகிறோம். மற்ற நாள்களில் வனத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஏதோ ஒரு நாளில் ஒரு மரம் நடுவதால் இதற்கு தீர்வு கிடைத்துவிடாது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  ஜாதவ் பேயங் இந்தியாவின் வன மனிதர் என்றழைக்கப்படுகிறார். கடந்த 36 ஆண்டுகளாக, தினமும் மரம் நட்டு வருகிறார். தனி ஒரு மனிதனாக, 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கியிருக்கிறார் பேயங். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் குளத்தில் ஜாதவை கௌரவப்படுத்தும் விதமாக ‘ஜாதவ் ஆரண்யா’ என்ற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஜாதவ் பேயங்

இதில், ஜாதவ் பேயங் கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய ஜாதவ், ``இயற்கை தான் நாம் நாட்டில் உள்ள அனைத்தையும் தீர்மானிக்கிறது. வெள்ளத்தில் எங்களது பகுதி முழுவதும் நாசமடைந்துவிட்டது. மரங்கள் எல்லாம் சேதமடைந்துவிட்டன. எனக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது. இதனால், முதலில் 20 மூங்கில் மரங்களை நட்டேன். அது நன்கு வளர்ந்தது. அந்த மகிழ்ச்சியைத் தொடர்ந்து மரங்களை நட்டேன். யானை, புலி, காண்டாமிருகம் போன்றவை வரும் அளவுக்கு அது அடர் வனம் ஆனது.

ஒரு நாள், 115 யானைகள் ஒன்றாக வந்துவிட்டன. அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘உன்னால் தான் இப்படி நடந்தது’ என்றனர். அதற்கு நான், ‘மரங்களால் உங்களது விளை நிலமோ, வீடுகளோ பாதிக்கப்படாது. அதிகாரிகளிடம் சென்று விளக்கம் கேளுங்கள்’ என்று கூறிவிட்டேன். அவர்கள் மரங்களை வெட்ட வேண்டும் என்று சொல்லும்போது, ‘முதலில் என்னை வெட்டுங்கள், பிறகு மரத்தை வெட்டுங்கள்’ என்று கூறினேன்.

ஜாதவ் பேயங்

தற்போது, காலநிலை மாற்றம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இயற்கை தினம், பூமி தினம் போன்ற நாள்களில் தான், நாம் மரம் நடுகிறோம். மற்ற நாள்களில் வனத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஏதோ ஒரு நாளில் ஒரு மரம் நடுவதால் இதற்குத் தீர்வு கிடைத்துவிடாது. எனவே, தினமும் மரம் நட வேண்டும். பள்ளிகளில் அறிவியல் என்பது வெறும் பாடப் பிரிவாக இருக்கக் கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அறிவியலை நேரடியாகக் கற்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் மரம் நட்டுப் பராமரிக்க வேண்டும். அதற்கு அந்தப் பள்ளியின் பெயரையே வைக்க வேண்டும். அதை யாரும் வெட்ட மாட்டார்கள். பிறந்தநாள் போன்ற தினங்களைக் கொண்டாடும்போது கேக் வெட்டுவதற்குப் பதிலாக மரம் நடவேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளையே பரிசாக அளிக்க வேண்டும்” என்றார்.