‘சாதனைகள் செய்யவில்லை; மாணவர்களின் சந்தேகங்களை தான் தீர்த்தேன்’- போலீஸ் காவலிலும் கடமை தவறாத ஆசிரியர் | Pudukkottai teacher who clarified students doubts in Police Custody

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (25/01/2019)

கடைசி தொடர்பு:09:10 (25/01/2019)

‘சாதனைகள் செய்யவில்லை; மாணவர்களின் சந்தேகங்களை தான் தீர்த்தேன்’- போலீஸ் காவலிலும் கடமை தவறாத ஆசிரியர்

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மண்டபம் ஒன்றில் போலீஸ் காவலில் இருந்த போதிலும் கடமை தவறாத ஆசிரியர் தெய்வீகன் என்பவர் பள்ளி மாணவர்களை மண்டபத்துக்கு வரவழைத்து பாடம் குறித்த ஆலோசனைகளை வழங்கி அசத்தி உள்ளார்.

 

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் போலீஸார் கைது செய்து அங்குள்ள மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.

அங்கு மண்டபத்தில் கைதாகி இருந்த கந்தர்வக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் தெய்வீகன், தனது மாணவ தலைவர்களை மண்டபத்துக்கு வெளியே வரவழைத்து அவர்களுக்கு அன்று நடத்த வேண்டிய பாடங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை வழங்கினார். கைதாகி போலீஸ் காவலில் இருந்தபோதிலும் கடமை தவறாமல் மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்கு பாடம் குறித்து ஆலோசனை வழங்கிய ஆசிரியைரை அங்கு இருந்த சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஆசிரியர் தெய்வீகனிடம் பேசினோம், ``எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஆசிரியராக மாணவர்களின் படிப்பு மீதும் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. மாணவர்களின் படிப்பு பாதிக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல.

நியாமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். வழக்கமாக நான் பள்ளியில் ஒரு பாடத்தை நடத்தி அன்றைய தினமே, அதை அப்போதே படிக்க வைத்துவிடுவேன். 9-ம் வகுப்பு மாணவர்கள் மிக முக்கியமாக ப்ராக்டிக்கல் செய்து சமர்ப்பிக்க வலியுறுத்தி இருந்தேன். பள்ளிக்குச் செல்லாததால், அவர்களுக்கு அதில் உள்ள சந்தேகங்களைக் கூற முடியவில்லை. உடனே மாணவ தலைவர்களை வரவழைத்து அவர்களிடம் விளக்கம் அளித்தேன். மேலும், அன்று படிக்க வேண்டிய பாடம் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி சக மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டினேன்.

பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை. என் பள்ளி மாணவரின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தேன். அது எங்கிருந்து அளித்தால் என்ன? அவர்களுக்கு சந்தேகம் தீர்ந்தால் போதும்" என்றார். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது விமர்சனங்களை அள்ளித் தெளித்து வரும் நிலையில், ஆசிரியர் ஒருவர் கடமை தவறாமல் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துள்ளது அனைத்து தரப்பினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.