கோவை சின்னத்தம்பி யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது - வரகளியாறு பகுதிக்கு இடமாற்ற முடிவு | Chinnathambi elephant to translocate

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (25/01/2019)

கடைசி தொடர்பு:08:40 (25/01/2019)

கோவை சின்னத்தம்பி யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது - வரகளியாறு பகுதிக்கு இடமாற்ற முடிவு

கோவையில் சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானையை, இடமாற்றம் செய்வதற்காக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி

கோவை கணுவாய் முதல் ஆனைக்கட்டி பகுதிகள் வரை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம். வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் இதை பழங்குடி மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தங்களது விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுவதாகக் கூறி, விவசாயிகள் அந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

குறிப்பாக, சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் இரண்டு யானைகளால் தாங்கள் அதிகம் சேதம் ஏற்படுவதாகக் கூறி அந்த யானைகளைப் பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு, அந்தப் பகுதி மக்கள் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கடந்த மாதம் விநாயகன் யானையை, முதுமலை பகுதி அருகே வனத்துறையினர் இடமாற்றம் செய்தனர்.

கும்கி யானை

இதையடுத்து, சின்னத்தம்பியைக் கடந்த சில வாரங்களாகவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் பெரிய தடாகம் அருகே சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தினர். முதுமலை, கலீம், விஜய், சேரன் ஆகிய நான்கு கும்கி யானைகள் மற்றும் ஜே.சி.பி-களின் உதவியுடன் சின்னத்தம்பியை டாப்ஸிலிப் அருகே உள்ள வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய உள்ளனர். சம்பவ இடத்தில் மருத்துவர்கள் கலைவாணன், அசோகன், மனோகரன், விஜயராகவன் ஆகியோர் உள்ளனர்.