`தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வணிக வளாகம் இருப்பது கமிஷனருக்கே தெரியாது’- பொதுமக்கள் ஆதங்கம் | Tanjore Corporation business complex issue

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (25/01/2019)

கடைசி தொடர்பு:14:06 (25/01/2019)

`தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வணிக வளாகம் இருப்பது கமிஷனருக்கே தெரியாது’- பொதுமக்கள் ஆதங்கம்

போதிய நிதி இல்லை என்ற காரணத்தால் மக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படாமல் இழுத்தடிப்பது ஆட்சியாளர்களின் வழக்கம். தஞ்சை பூக்காரத் தெருவிலோ பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு கட்டடம் பல ஆண்டுகளாக திறக்கப்பட்டாமல் இருப்பது இப்பகுதி மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்டடம்

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன் நம்மிடம் பேசியபோது ``இந்தப் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துல கட்டப்பட்ட மீன் சந்தை நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்துச்சு. பொதுமக்களுக்குப் பயன்படணும்ங்கற சமூக நோக்கத்தோடு, குழந்தைசாமி என்பவர் இதுக்காக தன்னுடைய இடத்தை தானமாக கொடுத்தார். நீண்டகாலமாக அது பயன்பாட்டில் இருந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கிக்கிட்டு இருந்த மீன் சந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் இறைச்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நிர்வாக சீர்கேட்டினாலும் இன்னும் இது திறக்கப்படாமலே இருக்கு. இதனால் பொதுமக்களும் ரொம்ப சிரமப்படுறாங்க. வியாபாரிகளும் கஷ்டப்படுறாங்க.

ராஜேந்திரன்

பிரதான சாலையிலயே மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகள் அமைக்கப்பட்டதால், போக்குவரத்துக்கும் பெரும் நெருக்கடியா இருக்கு. கடந்த 5 ஆண்டுகளாக இந்த அவலநிலை தொடர்ந்துக்கிட்டு இருக்கு. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இதைப்பத்தியெல்லாம் கண்டுக்குறதே இல்லை. புதிதாக கட்டப்பட்ட இறைச்சி வணிக வளாகம் திறக்கப்பட்டால், மாநகராட்சிக்கு மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல வாடகை கிடைக்கும். 5 ஆண்டுகளாக வருமான இழப்பு ஏற்பட்டிருக்கு. இவ்வளவுக்கும் தஞ்சாவூர் மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிச்சிக்கிட்டு இருக்கு.

மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கு. தஞ்சாவூர் மாநராட்சிக்கு கமிஷனராக வரக்கூடியவங்களுக்கு, இப்படி ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டு மூடிக்கிடக்குற விஷயமே தெரியாது. தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சிக்குனு தனியாக ஒரு கமிஷனரே இல்லை. நகராட்சிகளுக்கான மண்டல இயக்குநராக இருக்குற காளிமுத்துதான், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். 26 நகராட்சிகளுக்கு அவர் பொறுப்பு வகிக்கிறார். இதனால் தஞ்சாவூர் மாநகராட்சியை அவரால் திறமையாக நிர்வாகம் செய்ய முடியலை” என ஆதங்கப்பட்டார்.