கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு சிறப்பு - விரைவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் | tirupati venkateswara temple festival at kaniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (25/01/2019)

கடைசி தொடர்பு:11:03 (25/01/2019)

கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு சிறப்பு - விரைவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்

ன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ளது. இன்று வேங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயில், கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம். அதுபோலவே கடலின் மையத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயரச் சிலை, காந்தி மண்டபம் எனப் பல முக்கிய இடங்கள் உள்ளன. கன்னியாகுமரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி கோயிலும் கட்டப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

ரூ.22.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சென்று தரிசனம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை நடக்கவுள்ளது. இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி 40 அடி உயரத்தில் கொடிக்கம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வெங்கடாசலபதி கோயில்

யாகசாலை பூஜைகள், கடந்த 22-ம் தேதி தொடங்கி நடந்துவருகின்றன. இன்று 7 அடி உயரம் கொண்ட வேங்கடாசலபதி சிலை மற்றும் 3 அடி உயரம் கொண்ட பத்மாவதி தாயார் சிலை, ஆண்டாள் மற்றும் கருடர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. கும்பாபிஷேகம் நடக்கும் வரும் 27-ம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீனிவாசா கல்யாணம் நடக்கிறது.