`கிராம சபைக் கூட்டம், சான்றோன் விருதுகள்..' - கமலின் 3 நாள் சுற்றுப்பயணத் திட்டங்கள் | kamalhasan to participate grama sabha meeting

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (25/01/2019)

கடைசி தொடர்பு:12:05 (25/01/2019)

`கிராம சபைக் கூட்டம், சான்றோன் விருதுகள்..' - கமலின் 3 நாள் சுற்றுப்பயணத் திட்டங்கள்

மக்கள் சந்திப்பு, கிராம சபைக் கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன் கட்சி தொடங்கியதிலிருந்து மக்களையும், மாணவர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாகக் கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்துவந்தார். குறிப்பாகக் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய கட்சியினரை கலந்துகொள்ள அறிவுறுத்தி இருந்தார். கடந்த 2-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் உள்ள களியாம்பூண்டி கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கமல் பார்வையாளராக பங்கேற்றார். கமல்ஹாசன் நடத்தும் கிராம சபைக் கூட்டங்களைத் தொடர்ந்து தி.மு.க-வினரும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.

உத்தரமேரூர் கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன்

``இன்று சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திக்கிறார் கமல். நாளை குடியரசு தினம் என்பதால் கடலூர் கிராமத்தில் உள்ள குணமங்கலம், அழகியநத்தம் ஆகிய கிராமங்களில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து தேவனாம்பட்டினம், மந்தாரக்குப்பம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார். ஜனவரி 27-ம் தேதி கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மக்கள் நீதி மையம் சார்பில் வழங்கப்படும் சான்றோன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். ஏற்கெனவே பொள்ளாச்சியில் 12 பேருக்குச் சான்றோன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்காக உழைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதுபோல் கடலூர் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர்களுக்கு இந்த முறை சான்றோன் விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க