எத்தனை முதலீடு; எவ்வளவு வேலைவாய்ப்புகள்?' - முதலீட்டாளர் மாநாடு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி | Chennai HC Questioned about TamilNadu Global Investors Meet

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (25/01/2019)

கடைசி தொடர்பு:12:22 (25/01/2019)

எத்தனை முதலீடு; எவ்வளவு வேலைவாய்ப்புகள்?' - முதலீட்டாளர் மாநாடு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி

உலக முதலீட்டாளர்கள், மாநாடு மூலம் இதுவரை தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் 23, 24-ம் தேதியில் இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குத் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில் இந்த மாநாடு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. போலி நிறுவனங்கள் முதலீடு செய்கிறேன் என உத்தரவாதம் அளித்துவிட்டு முதலீடு செய்யாமல் ஏமாற்றுகின்றன. அதைத் தடுக்க வேண்டும். அதற்காகத் தான் மாநாட்டில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் விதிமுறைகளை வகுக்கக் கோருகிறோம். மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்பது எங்களது மனுவில் உள்ள கோரிக்கையாக இருந்தாலும். மாநாடு தொடங்கும் நேரம் என்பதால் அதை வலியுறுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை (21-01-2019) விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ``இந்த மாநாட்டுக்கு  5000 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 2,900 நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளது. இந்த மாநாடு உள்ளூர் முதலீட்டாளர்களை வெளியிலிருந்து வரும் முதலீட்டாளர்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார். நிறுவனங்கள் அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன. இந்த மாநாட்டின் மூலம் ரூ 2.55 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க முடியும்” எனத் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்காமல் ஒத்தி வைத்திருந்தனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக் கோரிய  மனுவைத் தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில் தமிழக அரசுக்குப் பல கேள்விகளை முன்வைத்தது. 2015 மற்றும் 2019-ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு  மூலம் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதலீட்டாளர்கள் எத்தனை தொழில்களை தொடங்கியுள்ளனர். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, ஆகியவற்றை அறிக்கையாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரதான கோரிக்கை அடங்கிய மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.