172வது தியாகராஜர் ஆராதனை விழா! - பஞ்சரத்தின கீர்த்தனை பாடி உருகிய இசைக் கலைஞர்கள் | 172 thyagarajar aarathanai festival

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (25/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (25/01/2019)

172வது தியாகராஜர் ஆராதனை விழா! - பஞ்சரத்தின கீர்த்தனை பாடி உருகிய இசைக் கலைஞர்கள்

திருவையாறில் 172வது தியாகராஜர் ஆராதனை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சுதா ரகுநாதன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் தியாகராஜர் சமாதி முன்பு ஒன்று கூடி ஒரே நேரத்தில் பஞ்ச ரத்தின கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வடகரையில் இசை மேதை சத்குரு தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது.அந்த இடத்தில் தியாகராஜர் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ஏராளமானவர்கள் தியாகராஜர் நினைவிடத்துக்கு வந்து இசைக் கடவுளான தியாகராஜர் சந்நிதிக்கு வந்து வணங்கிச் செல்வதும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த வருடம் 172வது இசை அஞ்சலி ஆராதனை விழா இன்று நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் தினம்தோறும் பிரபலமான இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக தியாகராஜர் இல்லமான திருமஞ்சன வீதியிலிருந்து தியாகராஜர் உற்சவரை அலங்கரித்து உஞ்சவர்த்தினி பஜனை பாட்டுப் பாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் விழா பந்தலை அடைந்ததும் தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சரியாக ஒன்பது மணிக்கு சுதா ரகுநாதன், மஹதி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர் சுமார் ஒரு மணி நேரம் இசை கீர்த்தனை பாடப்பட்டது. நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ``ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொள ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ``துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ``ஸாதிஞ்செநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ``கனகன ருசி ரா கநகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த "எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களை பாடி இசை ஆராதனை செலுத்தினர்.

ஆராதனையில் கலந்துகொண்ட இசைக் கலைஞர்கள் எவ்வளவு பெரிய இசைக் கலைஞர்களாக இருந்தாலும் தியாகராஜர் சந்நிதி முன் அமர்ந்து அவருக்கு இசை அஞ்சலி செலுத்துவதை வரமாக நினைப்பார்கள் அதன்படி ஆராதனைக்கு வந்து இசை அஞ்சலி செலுத்திய பிறகுதான் கற்ற இசை முழுமை பெறுவதாக எண்ணுவார்கள். அதன் அடிப்படையிலேயே எல்லோரும் இங்கு கூடி இசை அஞ்சலி செலுத்துகிறோம் என தியாகராஜரை நினைத்துக் கூறி உருகினார்கள். இரவு 8 மணிக்கு மல்லாரி வீதி உலாவுடன் ஆராதனை விழா நிறைவு பெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க