மாற்றுத்திறனாளி ஆண்கள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் சென்னைப் பெண்! #HatsOff | Chennai woman manju priya got a chance to guide physically challenged men's cricket players

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (25/01/2019)

கடைசி தொடர்பு:13:35 (25/01/2019)

மாற்றுத்திறனாளி ஆண்கள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் சென்னைப் பெண்! #HatsOff

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு தலைமைச் செயலாளராக முதன் முறையாக மஞ்சுப் பிரியா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

                        பெண்


``ஒரு பெண்ணால் எப்படி கிரிக்கெட் டீமை வழிநடத்த முடியும் என எல்லோரும் ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறாங்க. நான் தலைமைச் செயலராக தேர்வு செய்யப்பட்டபோது கூட, நிறைய எதிர்ப்புகள் வந்தது. ஆனால், தமிழக அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல், முழு மனதுடன் அவர்களில் ஒருத்தியாக என்னை ஏற்றுக்கொண்டனர். அவர்களைச் சிறப்பாக வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையில் எனக்குப் பக்கபலமாகவும் இருந்தனர்.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரமும், அரசின் உதவியும், மக்களின் ஆதரவும்  கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி என்ற ஒன்று இருப்பது கூட நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அவர்களை உலக அளவில் அடையாளப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். தமிழகத்தின் சார்பாக மற்ற மாநிலங்களுடன் நிறைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கூட தமிழக வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்ற மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உலக அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் தமிழக வீரர் சுகுனேஸ் ``மேன் ஆஃப் த மேட்ச் " வென்று தமிழக அணிக்குப் பெருமை சேர்த்தார். வருகிற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அசோஷியேஷன் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான  ``அஜித்  வடேகர் டிராபி" நடத்தப்பட திட்டமிட்டுள்ளோம்.  

கிரிக்கெட்

தமிழக வீரர்கள் முழு எனர்ஜியுடன், பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் வாகை சூடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்தகட்ட முயற்சிகளின் மூலம், உலக அளவில் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி அடையாளப்படுத்தப்படும். அதற்கான என் முழு உழைப்பையும் செலுத்துவேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்.