தந்தங்கள் உடைந்து, ரத்தக் காயங்களுடன் லாரியில் ஏற்றப்பட்ட சின்னத்தம்பி யானை! | Chinnathambi elephant injures while translocate operation

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (25/01/2019)

கடைசி தொடர்பு:15:28 (25/01/2019)

தந்தங்கள் உடைந்து, ரத்தக் காயங்களுடன் லாரியில் ஏற்றப்பட்ட சின்னத்தம்பி யானை!

கோவையில் சின்னத்தம்பி யானையை இடமாற்றம் செய்வதற்காக பிடித்தபோது, தந்தங்கள் உடைந்து காயம் ஏற்பட்டது.

சின்னத்தம்பி

கோவை கணுவாய் முதல் ஆனைக்கட்டி பகுதிகள் வரை காட்டு யானைகள் நடமாட்டம்  அதிகம். வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் இதை பழங்குடி மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தங்களது விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுவதாகக் கூறி, விவசாயிகள் அந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

குறிப்பாக, சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் இரண்டு யானைகளால் தாம் அதிகம் சேதம் ஏற்படுவதாகக் கூறி அந்த யானைகளைப் பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு, அந்தப் பகுதி மக்கள் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கடந்த மாதம் விநாயகன் யானையை, முதுமலை பகுதி அருகே வனத்துறையினர் இடமாற்றம் செய்தனர்.

சின்னத்தம்பி

இதையடுத்து, சின்னத்தம்பியை கடந்த சில வாரங்களாகவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் பெரியதடாகம் அருகே சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தினர். சின்னத்தம்பியுடன், ஒரு பெண் யானை மற்றும் குட்டி யானை இருந்ததால், கும்கிகளை வைத்து அவை விரட்டப்பட்டன. இதன் பிறகு, ஜே.சி.பி மற்றும் கும்கிகளின் உதவியுடன் கயிறு கட்டி சின்னத்தம்பி யானையை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர் அப்போது, தப்பிக்க முயன்ற சின்னத்தம்பி ஜே.சி.பி-யில் சிக்கிவிட்டது. இதில், சின்னத்தம்பியின் தந்தங்கள் உடைந்து ரத்தம் வழிந்தது. மேலும், அதன் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த பகுதிகளில் வனத்துறையினர் மருந்து தடவினர். இதற்கு அந்தப் பகுதி மக்களும், சூழலியல் ஆர்வலர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.