பூத் கமிட்டி ரெடி... பிரசாரம் மட்டும்தான் பாக்கி! - களத்தில் கமல்ஹாசன் | booth committee constituted in kamalhasan makkal neethi mayyam

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (25/01/2019)

கடைசி தொடர்பு:15:31 (25/01/2019)

பூத் கமிட்டி ரெடி... பிரசாரம் மட்டும்தான் பாக்கி! - களத்தில் கமல்ஹாசன்

இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 20 சட்டமன்றத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முடித்துள்ளது. இனி ஓட்டு வேட்டையாட வேண்டியதுதான் பாக்கி என்று ம.நீ.ம நிர்வாகிகள் குஷியாகியுள்ளனர்.

கமல்

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரையில் பூத் கமிட்டியின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாகம் வாரியாக வாக்குப்பட்டியலில் உள்ளவர்களை சரிபார்ப்பதில் தொடங்கி, வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்து வருவது வரையில், தாங்கள் சார்ந்த கட்சிக்கு அடிப்படை நாதமாக பூத் கமிட்டிகள் இருக்கின்றன. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் யாரும் இதுவரையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ ஏ.கே.போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை இட்டது தொடர்பான வழக்கு மட்டும் நடைபெற்று வருகிறது. ஆகவே, 18 தொகுதிகளோடு, திருவாரூர் தொகுதியிலும் இடைத்தேர்தலை நடத்திட எந்தச் சட்ட இடையூறும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இந்நிலையில், 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள் பூத் கமிட்டி அமைத்துள்ளன. மூன்றாவது கட்சியாக, மக்கள் நீதி மய்யமும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடித்துள்ளது. தி.மு.க ஒருசில தொகுதிகளில் மட்டும் பூத் கமிட்டி அமைத்துள்ளது.

கமல்ஹாசன்

இதுகுறித்து பேசிய ம.நீ.ம கட்சியின் மூத்த நிர்வாகி, ``ஒரு பூத்துக்கு ஒரு நிர்வாகி வீதம், ஒரு தொகுதிக்கு குறைந்தது 245 பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகியின் கட்டுப்பாட்டில் 2,500 வாக்காளர்கள் வருவார்கள். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் தளகர்த்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகளை நிர்வகிக்க தொகுதி வாரியாகப் பொறுப்பாளர்களும், அவர்களை கண்காணிக்க மாநில அளவில் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் பணியை சத்தமில்லாமல் செய்து வருகிறோம். இனி தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியதுதான் பாக்கி. கஜா புயல் பாதித்த பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டு வந்த பிறகு, ம.நீ.ம-வுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் இடைத்தேர்தலில் அந்த வரவேற்பு எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்’’ என்றார்.

பூத் கமிட்டியோடு, கிராம சபை கூட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு கட்சியின் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளாராம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளாட்சி அமைப்புகள் இயங்குகின்றன. கிராமம்தோறும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் ம.நீ.ம நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, அடித்தட்டு மக்களிடம் எளிதில் சென்றடைய முடியும் என்பதில் கமல்ஹாசன் தெளிவாக இருக்கிறாராம். இதே ரூட்டில் தி.மு.க-வும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டது. யார் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் என்பது வரும் தேர்தலில் தெரிந்துவிடும்.