‘லஞ்சமும் ஊழலும் இன்னும் ஒழியவில்லை’ - வாழ்த்து செய்தியில் விஜயகாந்த் வேதனை | Vijayakanth Republic Day wishes

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (25/01/2019)

கடைசி தொடர்பு:16:53 (25/01/2019)

‘லஞ்சமும் ஊழலும் இன்னும் ஒழியவில்லை’ - வாழ்த்து செய்தியில் விஜயகாந்த் வேதனை

மக்களாட்சி ஏற்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடியும் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்படவில்லை எனக் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

நாடு முழுவதும் நாளைக் குடியரசு தினம் கொண்டாடப்படும் வேளையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து அறிக்கை அனுப்பியுள்ளார். “வெள்ளையர்களின் அடக்குமுறையை அகிம்சை வழியிலும் புரட்சி வழியிலும் எனப் பல்வேறு போராட்டங்கள் மூலம் நாம் சுதந்திர இந்தியாவைப் பெற்றோம். இந்தியாவில் மக்களாட்சி ஏற்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடியும், லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்படவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழே ஒருவேளை உணவின்றி வாழும் நிலையும், விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழிப்போம்’ என்று புரட்சிக்கவி பாரதியார் பாடியுள்ளார். ஆனால் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வறுமை, வறட்சி, தண்ணீர் பிரச்னை, நஷ்டம், கடன் தொல்லை போன்ற காரணங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடியும் சூழலில் அவர்கள் வாழ்க்கை இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டியது இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. அதேபோல் சாதி, மதம், இனம், மொழி என்று பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே உணர்வோடு ஒற்றுமையாக இருப்பது அவசியம். நம் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் நம் கலாசாரத்துக்காக, மொழிக்காக உயிர் உடைமையைக் கூட இழப்பார்கள், ஆனால் தங்கள் உரிமைகளை யாருக்காகவும் இழக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

இந்தக் குடியரசு தினத்தில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமையட்டும், மக்கள் துன்பங்கள் ஏதுமின்றி மகிழ்வுடன் வாழட்டுமென அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க