`காப்பீட்டுத் தொகை எங்கே?’ - காய்ந்த நெற்பயிர்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் | Farmers staged protest in Ramanathapuram over insurance

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (25/01/2019)

`காப்பீட்டுத் தொகை எங்கே?’ - காய்ந்த நெற்பயிர்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்

 காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை காய்ந்துபோன நெற்பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டுக்கான விவசாயக் காப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், காப்பீட்டுத் தொகை கொடுப்பது தொடர்பான அறிவிப்பு எதையும் மாவட்ட ஆட்சியர் வெளியிடவில்லை.

 இதனால், வெகுண்டெழுந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த காய்ந்துபோன நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை 550 கோடி வழங்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூறியதாக வெளியாகி இருந்த நாளிதழ்களைக் காட்டியபடி கேள்வி எழுப்பினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலில் திருப்தி அடையாத விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

 இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் கூறுகையில், ``ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு 3.03 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வறட்சியால் கருகிப்போனது. இதனால் நஷ்டமடைந்த 1,52,460 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அவர்களுக்கு காப்பீடு தொகையை, கடந்த ஆண்டு ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அத்தொகை வழங்கப்படவில்லை. இதனிடையே மாவட்ட அமைச்சரான மணிகண்டன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காப்பீடு தொகையாக 550 கோடி வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், இன்று வரை எதுவும் நடக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பயன் ஏதும் இல்லை. மேலும், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் பங்கெடுப்பதில்லை. இதைக் கண்டித்து இன்று கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்'' என்றார்.