`இது போர்!' - தொடர் தாக்குதல்களுக்குத் தயங்காத சூழலியல் போராளிகள் | Continuous attacks on environmental defenders by ruling parties

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (26/01/2019)

கடைசி தொடர்பு:11:21 (26/01/2019)

`இது போர்!' - தொடர் தாக்குதல்களுக்குத் தயங்காத சூழலியல் போராளிகள்

ஒரு படுகொலை. பல எதிர்வினைகளை ஆற்றுகின்றன. அது மற்றவர்களை அடக்குவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதமாக ஆளும் வர்க்கம் நினைக்கின்றது. ஆனால், அதே ஆயுதம் அவர்களுக்கு எதிராகத் திரும்பும்.

`இது போர்!' - தொடர் தாக்குதல்களுக்குத் தயங்காத சூழலியல் போராளிகள்

போர் தொடங்கிவிட்டது. போர் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், செல்லவேண்டிய பாதை நெடுந்தூரம் உள்ளது. அவர்கள் தாக்குவதை நிறுத்தவில்லை. இவர்களும் போராடுவதை நிறுத்தப் போவதில்லை. மண்ணைக் காக்க, வளத்தைக் காக்க, மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடும் சூழலியல் ஆர்வலர்களையும் சுற்றுச்சூழல் போராளிகளையும் கொண்ட படை இது. இந்தப் படை நிலத்தையும், நிலத்தின் வளத்தையும் சுரண்டியெடுக்கத் துடிக்கும் பெருமுதலாளிகளின் லாபவெறிக்கு அடிபணியும் அரசாங்க அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் படை. இந்தப் படையின்மீது நீங்கள் எத்தனை தாக்குதல்களைத் தொடுத்தாலும் மக்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் வரை ஓயாது. இந்நிலத்தின் சுற்றுச்சூழலை அதன் தன்னியல்பை மீட்டெடுக்கும் வரை ஓயாது. 

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்தப் போர் நடந்துகொண்டிருக்கிறது. மூன்றாம் உலக மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு அவர்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்காகப் போராடும் போராளிகள் தாக்கப்படுகிறார்கள். பெண் போராளிகள் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். இவை எதற்குமே அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் தம் மண்ணின் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். தம் வளங்கள் தம் மக்களுக்குப் பயன்பட வேண்டும். எந்த விதமான தாக்குதல்களுக்கும் அஞ்சாதவர்களைச் சரிக்கட்டவே முடியாது. அதனால் கொன்றுவிடு. அப்படியான படுகொலைகள் பலவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் கொலைகளைப் பதிவுசெய்யும் குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு 2017-ம் ஆண்டில் மட்டுமே 200 சூழலியல் போராளிகளும் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டதாகப் பதிவு செய்தது. 2018-ம் ஆண்டும் அதற்குச் சளைத்ததில்லை. இந்தியா உட்பட 27 நாடுகளில் மொத்தம் 321 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அனைவருமே மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுபவர்கள். அவர்களில் 77 சதவிகிதம் பேர் சுற்றுச்சூழல் போராளிகள். 

அர்ஜூன் சம்பத்

ஒரு படுகொலை. பல எதிர்வினைகளை ஆற்றுகின்றன. அது மற்றவர்களை அடக்குவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதமாக ஆளும் வர்க்கம் நினைக்கின்றது. ஆனால், அதே ஆயுதம் அவர்களுக்கு எதிராகத் திரும்பும். அது கொலையல்ல விதை. அந்த விதையின் வளர்ச்சி அபாரமானது. அந்த வளர்ச்சியைப் புரிந்துகொண்ட அரசும் பெருமுதலாளிக் கூட்டமும் தற்போது மற்றுமோர் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். அந்த ஆயுதம்தான் போராளிகளின் பிம்பங்களை உடைப்பது. அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை, செல்வாக்கைக் குலைப்பது. இதைச் செய்வதன் மூலம் அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்களோ யாருடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் போராடுகிறார்களோ அவர்களிடமிருந்து மக்களிடமிருந்து சூழலியல் போராளிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அதன்மூலம் எதிர்ப்புகளை எழுச்சிகளை மழுங்கடிக்க வேண்டும். அதற்காகப் பல அவதூறு கருத்துகளை, பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  தனிமனிதத் தாக்குதல்களையும் தாண்டி அரசியல், போராட்டம் என்று எதிலுமே சம்பந்தப்படாத குடும்ப உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்திப் பேசுவது தரம்தாழ்ந்த அரசியல். வேதாந்தாவின் ஸ்டெர்லைட் வழக்குகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் மத்திய ஆளும் கட்சி வெளிப்படையாக இது தொடர்ச்சியாகச் செயல்படும் என்று அறிவிக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளையும் 8 வழிச் சாலை, சாகர்மாலா, நதிநீர் இணைப்பு போன்ற ஆபத்தான திட்டங்களையும் சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்புகளை அடக்கியாக வேண்டும். மொத்தமாக இல்லாமல் ஆக்கவேண்டும். அதில் சில ஆதிக்க கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். யாரும் பிரச்னைகளைப் பற்றிப் பேசவே கூடாது. பேசுபவர்களைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். ஆனால், உண்மைகள் மக்களுக்குத் தெரியும். 

8 வழிச் சாலை, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என்று தமிழகத்தின் அனைத்து வகையான சூழலியல் அத்துமீறல்களையும் எதிர்த்து மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர் பியூஷ் மானுஷ். அவர் குறித்துப் பல அவதூறுகளைச் சொல்வதோடு அவர்களின் குடும்பத்தாரையும் இழிவுப்படுத்தும் வகையில் அர்ஜூன் சம்பத் பொதுவெளியில் பேசிவருகிறார். இதை வன்மையாகக் கண்டித்தும் இந்த இழிச்செயலுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்து பியூஷைத் தொடர்புகொண்டு பேசினோம்,

பியூஷ் மானுஷ்

``ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்றோரிடம் ஓட்டு வங்கி பெரியளவில் இருக்கிறது. அதை அவர்கள் இழப்பதற்குக் காரணமாக நாம் இருக்கிறோம். அவர்கள் செய்யும் குற்றங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம். உருவாகும் எழுச்சிகளைத் தடுப்பதற்காக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினைகளை உண்டு செய்கிறார்கள். நக்சலைட்டுகள், வெளிநாட்டு நிதி வருகிறது என்றெல்லாம் பரப்பினார்கள். அதையெல்லாம்விட எல்லைமீறிய அபத்தமான பேச்சுகளையும் பொய்யுரைகளையும் சமீப காலங்களில் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் பரப்பவுதற்கும் இதுதான் காரணம். இருபது வருடங்களாக இயங்கி வருகிறேன். பல அரசியல் கட்சிகளை எதிர்த்துப் பேசியிருக்கிறேன். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என்று பலரையும் எதிர்த்துப் போராடியுள்ளேன். போராடிக்கொண்டும் இருக்கிறேன். இருப்பேன். ஆனால், பா.ஜ.க போல் தரக்குறைவாகப் பேசுபவர்களையும் நடந்துகொள்பவர்களையும் பார்த்ததே இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். பொய்யான பிம்பங்களை உருவாக்குகிறார்கள். போர்களில்தான் கற்பழிப்பு, வன்கொடுமைகள் போன்றவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அர்ஜூன் சம்பத் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கலாசாரப் பாதுகாவலர் என்று சொல்கிறார். பெண்களை இழிவாகப் பேசும் இவர்தானா உண்மையான கலாசாரப் பாதுகாவலர்?"

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து செய்த பல வேலைகள் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவே இருக்கிறது. முக்கியமாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கினார்கள். தமிழகத்தில் இதுபோன்ற பொய்யுரைக்கும் அறிக்கைகள் உதயகுமார் மீது ஏற்கெனவே வந்துள்ளன. தாதுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய முகிலனைப் பொய் வழக்குகள் போட்டுக் காரணமே இல்லாமல் ஓராண்டுச் சிறை வைத்தனர். கிரீன் பீஸ் (Green Peace) என்ற சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உலகளவில் சூழலியல் சுரண்டல்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அதன் இந்தியக் கிளையையும் அதன் செயல்பாடுகளையும் முடக்கினார்கள். பிரியா பிள்ளை என்ற சூழலியல் ஆர்வலர் கிரீன் பீஸ் மூலம் இயங்கிக்கொண்டிருந்தார். சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சுரங்கச் செயற்பாடுகளுக்கு எதிரான முக்கியமான போராட்டங்களை வழிநடத்தியவர். ஐ.நா நடத்திய ஒரு கருத்தரங்குக்குச் செல்ல விமானம் ஏறச் சென்றவரின் பாஸ்போர்ட்டை முடக்கிச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது மத்திய அரசு. பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டரீதியாகப் போராட்டம் நடத்தி அனுமதி வாங்கிச் சென்றார். கர்நாடகாவின் காளி ஆற்றில் கட்டப்படவிருந்த அணைகளுக்கு எதிராகப் போராடிய 57 வயதான அஜித் மனேஷ்வர் நாயக் கொல்லப்பட்டது, ஜார்கண்டின் இளம் பழங்குடியினப் பத்திரிகையாளர் அமித் டோப்னோ படுகொலை என்று நாட்டில் பெருகிவரும் சூழலியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவை எதற்குமே இன்னமும் தீர்வோ நீதியோ கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது.

பொய்யான செய்திகள் சமீப காலங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. அதிலும் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்களின் நற்பெயரைச் சீர்குலைக்கும் வகையிலும் வெளியாகும் பொய்யான செய்திகள் அதிகம். அவற்றை ஆராய்ந்து பார்க்கையில்தான் உண்மைகள் தெரியவருகின்றன. அவற்றின் மூலமாகப் போராட்டத்தின் தொடர்ச்சியை அதன் ஒற்றுமையைச் சீர்குலைப்பதையே முதன்மையான செயலாகச் செய்துவருகிறது மத்திய அரசு. இது ஒரு மோசமான அரசியல் தந்திரம். ஜெர்மனியைக் கைப்பற்ற முயன்றபோது ஹிட்லரின் நாஜிப்படை கையாண்ட முறை இது. நாஜிக்கள் மட்டுமல்ல, இத்தாலியில் முசோலினி, இலங்கை என்று இதுவரை அனைத்து பாசிச ஆட்சிகளும் கையாண்ட ஓர் ஆயுதமாக இந்தப் பொய்ச் செய்திகள் இருந்து வருகின்றன. 

சேலம்

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் ஐ.பி அறிக்கை என்ற ஒன்று வெளியானது. அது எப்படி வந்தது யார் வெளியிட்டது என்று யாருக்குமே தெரியவில்லை. இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத சூழலியல் செயற்பாட்டாளர்கள் அதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் கிரீன் பீஸ், உதயகுமார் போன்றோரைப் பட்டியலிட்டும் பிரதமர் அலுவலகத்துக்கு ஐ.பி (IB) அனுப்பிய அறிக்கை பொதுவெளியில் எப்படி வெளியானது? பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கை எப்படி வெளியாகும்? அப்படியென்றால் அரசே இதைச் செய்தியாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லத் திட்டமிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஐ.பி அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது முழுக்க முழுக்க ராதா மோகன் என்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதிதான். அவர் எழுதியவற்றை அப்படியே எடுத்து அறிக்கையாகச் செய்திருக்கிறது என்றால் நம் இந்திய உளவுத்துறை எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

இது தொடர்பாக வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம், ``மத்திய அரசும் அதைச் சார்ந்தவர்களும் சுற்றுச்சூழலுக்கு எதிராகப் போராடுபவர்களை தேசத்துக்கு எதிரானவர்கள் என்று வரையறுக்கிறார்கள். அதன்மூலம் மக்களுக்கு அவர்களிடம் இருக்கும் செல்வாக்கைக் குறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக யாரைச் சொல்கிறார்களோ அவர்கள் கேட்கும் அறிவியல்பூர்வமான கேள்விகளுக்கு முறையான பதிலைச் சொல்லவும் மறுக்கிறார்கள். அணு உலை, சுரங்கத் தொழிற்சாலை, நியூட்ரினோ என்று எதற்குமே நாம் சட்டரீதியாக முன்னெடுப்பதையும் நம் அறிவியல்பூர்வக் கேள்விகளையும் சந்திக்க அவர்களால் முடிவதில்லை. அதைத் தவிர்த்து இவர்கள் செய்வது வேறு. அந்தப் போராட்டங்களுக்கு உள்ளர்த்தம் கற்பிப்பது, அதில் முன்னிற்பவர்களைப் பற்றித் தவறாகச் சித்திரிப்பது, பொய்யான செய்திகளைப் பரப்புவது. சிறந்த உளவுத்துறையைக் கொண்டது மத்திய அரசு. அவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில்தான் சுற்றுச்சூழல் போராளிகள் இருக்கிறார்கள். அப்படியிருக்க வெளிநாட்டிலிருந்து நிதி கிடைக்கிறது, நக்சலைட்டுகள் என்று கூறுவதை ஏன் வழக்குத் தொடுத்து நிரூபிக்க முடியவில்லை? தர்க்கரீதியாக அறிவியல் ரீதியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவதையே செய்கிறார்கள்

சூழலியல் போராட்டம்

ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்துவதிலேயே பா.ஜ.க மிகச் சிரத்தையாக இருந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் சூழலியல் உரிமைகளைக் காக்கப் போராடும் போராளிகளையும் ஒடுக்குவதையும் அழிப்பதையும்கூட அந்தக் கொள்கைகளில் ஒன்றாகவே எடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. மண்ணைக் காக்கும் மக்களின் உரிமைகளைக் காக்கும் சட்டங்கள் தளர்த்தப்படுவது ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது அவற்றைச் செய்யும் அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பியூஷ் மானுஷ் போன்ற போராளிகளையும் அவர்களின் போராட்டங்களையும் மழுங்கடிக்கச் செய்யும் மத்திய அரசைச் சார்ந்தவர்களின் முயற்சி."

``நீங்கள் எவ்வளவு யுக்திகளை வேண்டுமானாலும் கையாண்டு போராட்டங்களையும் போராளிகளையும் ஒடுக்கலாம். ஒவ்வொரு அடக்குமுறைக்குப் பின்னரும் அதைவிட வலிமையான மக்கள் போராட்டமும் போராளிகளும் எழுந்து வரவே செய்வார்கள். நிலமும், நீரும், காற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள். நீங்கள் அதைப் பறிக்க முயல்கிறீர்கள். அது மக்களைப் போராளியாகத்தான் மாற்றும். எத்தனை போராட்டங்களை ஒடுக்கினாலும்..."


டிரெண்டிங் @ விகடன்