`குக்கர் இல்லாவிட்டால் என்ன... ‘வின்னர்’ சின்னம் இருக்கிறதே!’ - குபீர் உற்சாக அ.ம.மு.க | AMMK reaction over cooker symbol banned issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (25/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (25/01/2019)

`குக்கர் இல்லாவிட்டால் என்ன... ‘வின்னர்’ சின்னம் இருக்கிறதே!’ - குபீர் உற்சாக அ.ம.மு.க

60 ஆண்டுகளாக இருக்கிற சின்னம் உதயசூரியன், அதையே டெபாசிட் இழக்க வைத்தோம். 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்னொரு கட்சியின் சின்னத்தை 41,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தோம். சின்னம் ஒரு பொருட்டல்ல.

`குக்கர் இல்லாவிட்டால் என்ன... ‘வின்னர்’ சின்னம் இருக்கிறதே!’ - குபீர் உற்சாக அ.ம.மு.க

குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என டி.டி.வி.தினகரனுக்குத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் கருத்தால், உற்சாகத்தில் இருக்கிறது அ.தி.மு.க. `60 ஆண்டுகளாக இருக்கும் உதயசூரியன் சின்னத்தையே நாங்கள் தோற்கடித்தவர்கள்' எனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தினகரன். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், `தமிழகத்தில் இனிமேல் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தையே தங்கள் கட்சிக்கு நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட  வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையம், `சின்னம் ஒதுக்கீடு செய்வது ஆணையத்தின் வேலையில்லை. அப்பகுதி தேர்தல் அதிகாரிதான் முடிவு எடுப்பார். அதனால், மனுதாரர் அங்கு சென்றுதான் முறையிட வேண்டும்' எனக் கூறியிருந்தது. 

உச்ச நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றமும், `தினகரன் கேட்ட குக்கர் சின்னத்தையும் அவர் குறிப்பிட்டுக் கேட்டுள்ள 3 புதிய கட்சிப் பெயர்களில் ஏதாவது ஒன்றையும் 3 வாரங்களில் ஒதுக்க வேண்டும்’ எனத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைப்புச் செயலாளர் மதுசூதனன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், `தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கூடாது’ எனக் கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால், கட்சிப் பெயரை ஒதுக்குவதற்குத் தடை விதிக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், குக்கர் சின்னத்தை ஒதுக்கத் தடை விதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார் தினகரன். 

தினகரன்

இந்த வழக்கில்தான், `குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது' எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாதாடிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர், `ஆணையத்தில் பதிவு செய்யாத ஓர் அமைப்புக்கு ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அதன் அடிப்படையில் அ.ம.மு.க-வுக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது' எனக் கூறிவிட்டார். இந்தப் பதிலை அ.ம.மு.க-வினர் எதிர்பார்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் ஆணையத்தின் பதிலில் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

எடப்பாடி பழனிசாமி

இதைப் பற்றி நம்மிடம் விவரித்த அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், ``அ.தி.மு.க-வோடு அ.ம.மு.க இணைய வேண்டும் என டெல்லி வட்டாரத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. `இந்தத் துரோகிகளோடு நான் சேர மாட்டேன்' எனத் தினகரன் உறுதியாகக் கூறிவிட்டார். தனிக்கட்சியாக அ.ம.மு.க-வை அவர் இதுவரையில் பதிவு செய்யாததற்குக் காரணம், அ.தி.மு.க மீதான உரிமை பறிபோய்விடக் கூடாது என்பதுதான். தனிக்கட்சியாக பதிவு செய்தால் சுயேச்சை எம்.எல்.ஏ பதவிக்கும் சிக்கல் ஏற்படும். எனவேதான், குக்கர் சின்னத்தை வழங்காமல் தடை போடுகின்றனர்" என்றவர், 

குக்கர் சின்னம்

``குக்கர் சின்னம் இல்லை எனத் தேர்தல் ஆணையம்தான் கூறியிருக்கிறது. கட்சியை முறையாகப் பதிவு செய்யாததால் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். அ.தி.மு.க-வுக்கு மாற்றாக தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையில் அ.ம.மு.க-வை நடத்தி வருகிறோம். தொப்பி சின்னத்தைக் கேட்டு வழக்கு போட்டபோது, `தேர்தல் ஆணையம் நினைத்தால் பரிசீலனை செய்யலாம்' காசிநாத பாரதிஎன்றார்கள். பிறகு, குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதால் அதே வெற்றிச் சின்னத்தைக் கோருவதில் நியாயம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எங்களுக்குச் சாதகமாகப் பல விஷயங்கள் இருக்கின்றன" என்றார் விரிவாக. 

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தினகரன், ``60 ஆண்டுகளாக இருக்கிற சின்னம் உதயசூரியன், அதையே டெபாசிட் இழக்க வைத்தோம். 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்னொரு கட்சியின் சின்னத்தை 41,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தோம். சின்னம் ஒரு பொருட்டல்ல'’ எனப் பேசியிருக்கிறார். 

குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் பேசினோம். `` எங்களுக்கு டி.டி.வி மட்டும்தான் ஒரே சின்னம். பந்து மட்டை, விசில் என எந்தச் சின்னம் கொடுத்தாலும் கவலையில்லை. டி.டி.வி-யின் புகைப்படம் இருந்தாலே போதும். உறுதியாக வெற்றி பெறுவோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்துவிட்டதால், திருவாரூர் தொகுதியில் அனுதாப அலை வீசிக்கொண்டிருக்கிறது.

அதையே நம்பாமல், தோற்றுவிடுவோம் என பயந்து தேர்தலை ரத்து செய்வதற்குப் பாடுபட்டார் ஸ்டாலின். அங்கு நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். எம்.பி தேர்தலில் வெற்றி பெறுவதில் அ.தி.மு.க-வுக்கும் சிக்கல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படுவோம் என பயந்துதான் தம்பிதுரை சிக்கலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். எங்களுக்குக் கள நிலவரம் நன்றாக இருக்கிறது. நாங்கள் யாரையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சின்னத்தைக் கொடுத்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார் உறுதியாக.