ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம் 1,500 பேர் கைது! - ராமநாதபுரத்தில் புதிய ஆசிரியர் தேர்வுப் பணி தொடக்கம் | Ramnad: 1500 arrested over JACTTO-GEO protest

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (25/01/2019)

ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம் 1,500 பேர் கைது! - ராமநாதபுரத்தில் புதிய ஆசிரியர் தேர்வுப் பணி தொடக்கம்

 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக ராமநாதபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1,534 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மாற்று ஆசிரியர் நியமிக்கும் பணியைக் கல்வி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்
 https://www.vikatan.com/news/tamilnadu/102878-jacto-geo-case-to-be-hear-in-madurai-hc-bench-today.htmlதமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 4 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் கிடையாது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், அதை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஆசிரியர்கள் இன்றைக்குள் (ஜனவரி 25) பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 ஆனால், இதை ஏற்க மறுத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தாங்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இன்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட்டம் முழுதும் உள்ள 849 பெண்கள் உட்பட 1,534 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடர்ந்து புதிய ஆசிரியர்கள் தேர்வு. 
 இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாற்றாகப் புதியவர்களை தற்காலிகமாகப் பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களை மாதம் ரூ 7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. ராமநாதபுரம் நகராட்சி அறிஞர் அண்ணா பள்ளியில் இன்று கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பணியில் சேர விருப்பம் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்காத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், பணிக்கு வராதவர்கள் குறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.