`வாங்க.. பனங்கிழங்கு சாப்பிடலாம்!’ - அன்புடன் அழைக்கும் நாகை விவசாயிகள் | Palm products good for health, says farmers

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (25/01/2019)

`வாங்க.. பனங்கிழங்கு சாப்பிடலாம்!’ - அன்புடன் அழைக்கும் நாகை விவசாயிகள்

Palm Tree

இயற்கை மருத்துவ குணம் கொண்டதும், நீண்ட ஆயுளைத் தரும் மகத்துவம் நிறைந்ததுமான பனங்கிழங்கு, அறுவடை பணிகள் நாகை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

 

Palm Tree

 

விரைவில் தொடங்க இருக்கும் கோடைக்காலத்தின் கடுமையை சமாளிக்க, பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவை உதவுகின்றன. மேலும், பனையிலிருந்து வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இவை உடலுக்கு வலு சேர்த்து நீண்ட ஆயுளை தரக்கூடியதாகும். இப்படிப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய பனை மரங்களை, செங்கல் சூளைகளில் எரிக்கவும், வீடு கட்டவும் பயன்படுத்துவதற்காக அதிக அளவில் வெட்டப்படுகின்றன. இதனால் பனை மரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாக குறைத்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடற்கரையோரமுள்ள மணற்பாங்கான இடங்களில், பனை மரங்களின் நன்மையைக் கருதி, அதை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது பனை கிழங்குகளின் அறுவடை சீஸன் ஆகும். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர், சிங்கானோடை, பத்துகட்டு உள்ளிட்ட பகுதிகளிலும், பிரதாமராமபுரம், நாலுவேதபதி, விழுந்தமாவடி போன்ற இடங்களிலும் சாகுபடி செய்யப்பட்ட பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. இந்தப் பனங்கிழங்குகள் சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதுபற்றி பனங்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் பேசியபோது,

``பனை மரத்திலிருந்து விழும் பழங்களைச் சேகரித்து வைத்து, மணல் உள்ள இடத்தில் மேடு அமைத்து, அதில் பனை விதைகளை பதிப்போம். சில வாரங்களில் விதைகளின் வேர் பகுதி மாவுப் பொருளைச் சேகரித்து கிழங்காக உருவாகும். இந்தக் கிழங்குகளை ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் அறுவடை செய்வோம். இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து  நிறைய உள்ளது. உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது. குடல்புண், வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல் போன்றவற்றை நீக்கும் குணம் படைத்தது. சிலர் கிழங்கை அவித்து  சாப்பிடுவார்கள். சிலர் அவித்த கிழங்கை வெயிலில் காய வைத்து அதை மாவாக்கி காய்ச்சிப் பருகுவார்கள். வாயுத் தொல்லை உள்ளவர்கள் பனங்கிழங்கை மாவோடு, பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். சத்து மிக்க, மருத்துவ குணம் கொண்ட இந்தப் பனைப் பொருள்களை இந்த சீஸனில் அனைவரும்  சாப்பிடலாம்’’ என்றனர்.