காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு இத்தனை இலவசங்களா...சேலம் இளைஞர்களின் செம்ம முயற்சி! | Plastic bottle collecting machine introduced in salem bus stand

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (25/01/2019)

காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு இத்தனை இலவசங்களா...சேலம் இளைஞர்களின் செம்ம முயற்சி!

சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில், ஒரு தனியார் நிறுவனத்தின் நிதி உதவியால் (இரண்டு லட்சம் ரூபாய் செலவில்) பரணீதரன் ,தாம்சன் மார்ட்டின் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் முயற்சியால், பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கும் இயந்திரம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. தற்போது, தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு மாற்றாகப் பயன்படுத்தவேண்டிய பொருள்கள்குறித்து பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிலையில், இந்த இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ், கடந்த சில நாள்களுக்கு முன் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரம்

இந்த இயந்திரத்தினுள் 250 மில்லி லிட்டர் முதல் 2.25 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டில்களைப் போடலாம். உள்ளே செலுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அரைக்கப்பட்டு, இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரிக்கப்படுகிறது. காலியான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக, சில இலவசங்களும் கொடுக்கப்படுகின்றன. 5 நிமிடம் இலவசமாக, மொபைல் போன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, 5 நிமிட இலவச வைபை, 250 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பணத்தைத் தானமாகக்  கொடுக்கும் வசதி மற்றும் தள்ளுபடி கூப்பன்களைப் பெறும் வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி, ஐந்து வகையான இலவச வசதிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சேலம் புதிய பேருந்து நிலையம்

சேலம் மாநகராட்சி ஆணையர் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் பொதுமக்கள், காலியான பாட்டில்களைப் பொது இடங்களில் தூக்கி எறியாமல் இந்த இயந்திரத்தில் போட்டு, இலவசங்களைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல்வேறு இடங்களில் மறுசுழற்சி இயந்திரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.