தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 சதவிகித விசாரணை முடிவு! | Thoothukudi shooting incident; 20 percent of the inquiry has been completed, informs commission

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:21:32 (25/01/2019)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 சதவிகித விசாரணை முடிவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், இதுவரை 20 சதவித விசாரணையை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர்

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் 100-வது நாள் போராட்டத்தன்று, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றனர். இதில், திடீரென  போராட்டக்காரர்களுக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்திட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த ஆணையம் கடந்த  ஜூன் மாதத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது. இதற்காக, தூத்துக்குடி கடற்கரைச்சாலையில் உள்ள பழைய அரசினர் சுற்றுலா மாளிகையில் விசாரணை ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இந்த ஆணையம் கடந்த 7 வது கட்ட விசாரணை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவு பெற்ற 7 வது கட்ட விசாரணையில்  58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது .இதில்  48 பேர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 

விசாரணை ஆணையம்

இந்த 7வது கட்ட விசாரணை குறித்து ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 7 கட்ட விசாரணை  முடிந்துள்ளது. இந்த விசாரணையில், 48 பேர் சாட்சியம் அளித்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பிரமாண வாக்குமூலம் அளித்தவர்கள் என இதுவரையில், 155 பேரிடம், அதாவது 20 சதவிகிதம் விசாரணை முடிந்துள்ளது. மொத்தம் 700 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்ததும், முந்தைய ஆட்சியர், எஸ்.பி., சம்பவத்தின்போது பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணைத் தொடங்கும். ஆணையத்தில் இருந்து விசாரணைக்காக சம்மன் அனுப்பபட்டும் ஆஜராகாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளோம். இருப்பினும், இன்னும் 5 அல்லது 6 கட்ட விசாரணையில் முழுமையாக ஆணையத்தின் விசாரணை நிறைவுபெறும்” எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க