`ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு | Jacto Geo should withdraw protest says Minister Sellur raju

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (25/01/2019)

`ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியிருக்கிறார்.

செல்லூர் ராஜூ

மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னைச் சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முதல் உலக முதலீட்டாளர் மாநாடு அம்மா தலைமையில், மிகப்பெரும் வெற்றியடைந்தது. ரூ.2,42,000 கோடி முதலீடு தமிழகத்துக்குக் கிடைத்தது. 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 68 நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்திருப்பதின் அடிப்படையில் 3 ஆண்டுகளிலிருந்து 7ஆண்டுகளுக்குள் அவர்கள் தொழில் தொடங்கலாம் என்பதுதான் இதில் சிறப்பு வாய்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய 2-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. டிப்ளமோ, கலைஅறிவியல், பொறியியல் மாணவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு ஏற்பட உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, வெகுவாக தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்கள்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக முதல்வர் ஏற்கெனவே கருத்து கூறியுள்ளார். ஜாக்டோ-ஜியோவில் இருப்பவர்கள் என்ன ஊதியம் வாங்குகிறார்கள், தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் எவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் என்று ஊதியக்குழு அறிக்கையின்படி ஊதியம் உயர்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அவற்றை எண்ணிப்பார்த்து போராட்டத்தைக் கைவிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர், திறந்த மனதோடு செயல்படுகிறார். எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தூண்டிவிடத்தான் செய்வார்கள்’’என்றார்.