வனத்துறையுடன் மாணவர்கள் கைகோர்ப்பு - குருசடை தீவு அருகே ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்! | Cleaning work done by Forestry and College students at Kurusadai Island

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (26/01/2019)

வனத்துறையுடன் மாணவர்கள் கைகோர்ப்பு - குருசடை தீவு அருகே ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்!

பாம்பன் குருசடை தீவு பகுதியில் வனத்துறையினர் மற்றும் மதுரை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட தூய்மை பணியில் 1000 கிலோ நெகிழி குப்பை கழிவுப் பொருட்களை அகற்றினர்.

குருசடை தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி 

ஆண்டு தோறும் 8 மில்லியன் டன் நெகிழி கழிவுகள் கடல் பகுதிகளில் குவிந்து வருகிறது. இதனால் கடலில் வாழும் அரியவகை உயிரினங்கள் அழிந்து வருகிறது. குறிப்பாகக் கடல் கொந்தளிப்பில் இருந்து கரையோரப் பகுதிகளை பாதுகாக்க உதவும் பவளப்பாறைகளின் மீது நெகிழி கழிவுகள் படர்வதால் அவை சுவாசிக்க முடியாத நிலையில் அழிந்து வரும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுக்க கடலோரக் காவல் படையினர், வன உயிரின பாதுகாப்பு துறையினர், கடல்சார் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

குருசடை தீவு பகுதியில் தூய்மைப் பணி


இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வன காப்பாளர்  அசோக்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் படி, பாம்பன் அருகே உள்ள குருசடை தீவில் மண்டபம் வன உயிரின பாதுகாப்பு சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் மதுரை விவேகானந்தர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் இணைந்து கடல் பகுதியில் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியின் மூலம் குருசடை தீவு கடல் மற்றும் கடலோர பகுதிகளில் இருந்து நெகிழி குடிநீர் பாட்டில்கள், சேதமடைந்த மீன்பிடி வலைகள், எண்ணெய், தின்பண்ட கவர்கள் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்ட  1000 கிலோ குப்பைகளைச் சேகரித்தனர்.   நாட்டின் 70-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டின் தூய்மையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியின் போது 50-க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் சேகரிக்கப்பட்டன. இந்த கழிவுப் பொருட்கள் தீவுப் பகுதியில் இருந்து படகு மூலம் எடுத்து வரப்பட்டு பாம்பன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.