``ஒருவாரம் அவகாசம் பொன்.மாணிக்கவேலிடம் ஆவணங்களை ஒப்படையுங்கள்!'' - ஹைகோர்ட் உத்தரவு | Handover all idol theft documents to pon.manikavel madras hc order

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:13:52 (26/01/2019)

``ஒருவாரம் அவகாசம் பொன்.மாணிக்கவேலிடம் ஆவணங்களை ஒப்படையுங்கள்!'' - ஹைகோர்ட் உத்தரவு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலிடம், சிலைக்கடத்தல் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் ஒரு வாரத்தில் ஒப்படைக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவில்களில் போட்டோ எடுக்க தடைவிதிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள், இன்று ஜனவரி 25ம் தேதி , நீதிபதிகள் மஹாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், "சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த அரசு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. நீதிமன்றத்தின் 98 சதவிகித உத்தரவுகள் நிறைவேற்றப்படமாலேயே உள்ளன. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 105 காவலர்களை நான் கேட்ட நிலையில், வெறும் 3 பேரை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இவ்வழக்குகள் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அரசிடம் உள்ளன. அவற்றை பெற்றுத் தர வேண்டும்!" என்று கோரினார். 

டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "திருச்சி கமாண்டோ அலுவலகத்தை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் கோரிய அளவில் 105 காவலர்களை அளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்" என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சிலைக்கடத்தல் நீதிமன்றம் உத்தரவு

இறுதியாக பேசிய நீதிபதிகள், "இன்னும் ஒரு வாரத்துக்குள் சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.மயிலாப்பூர் மயில் சிலை காணாமல் போன வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது.

இதனிடையே ஸ்ரீரங்கம் கோவிலில் செல்பி மோகத்தால் புகைப்படம் எடுக்கப்படுவது தொடர்பான விவகாரமும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. "புகைப்படம் எடுக்க கோவில் சுற்றாலத்தலம் அல்ல. அவற்றுக்கு தடை விதிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோவில் வழிபாடு சங்கத்தின் தலைவர் ரமேஷிடம் பேசினோம். "பொன்.மாணிக்கவேல் வழக்கில் ஒருவார காலக்கெடுவுக்குள் ஆவணங்களை ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆலயங்களில் புகைப்படம் எடுக்க தடைவிதிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் கூறியிருப்பதில் சில கருத்துகள் உள்ளன. ஆலயங்களில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுக்க தவறியதால் தான், இப்போது வரை மதிப்புமிக்க சிலைகள் எவ்வளவு காணாமல் போயுள்ளன என்கிற தகவல் நம்மிடத்தில் இல்லாமல் போய்விட்டது. கோவில் உள்பிரகாரத்திலோ, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அதேவேளையில், நமது சிலைகள் பற்றிய ஆவணங்களை சேகரிப்பதற்கு அனுமதியும் வழங்க வேண்டும்!" என்றார்.