`இப்போ மட்டும் அரவக்குறிச்சில திட்டங்களை நிறைவேத்துறாங்க’ - செந்தில் பாலாஜி ஆதங்கம்! | Senthil balaji slams minister MR.vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (26/01/2019)

`இப்போ மட்டும் அரவக்குறிச்சில திட்டங்களை நிறைவேத்துறாங்க’ - செந்தில் பாலாஜி ஆதங்கம்!

``நான் எம்.எல்.ஏ-வாக இருந்தவரை, அரவக்குறிச்சி தொகுதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால்,18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி, எனது எம்.எல்.ஏ பதவி போனதும் அரவக்குறிச்சி தொகுதியில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர்" என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எள்ளும்கொள்ளுமாக வெடிப்பதாகச் சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். 

 

அரவக்குறிச்சி தொகுதியில் அமைச்சர் பூமிபூஜை

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பல்வேறு பிணக்குகள் காரணமாகத் தி.மு.க-வுக்கு தாவினார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாகப் பதவியில் இருந்தவரை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையும் எந்தத் திட்டங்களையும் அரவக்குறிச்சியில் செயல்படுத்தவில்லை. திட்டங்களைச் செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.94 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையிட்டுத் தொடங்கிவைத்தார். அதாவது, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியமஞ்சுவாரி, ஆலமரத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் என ரூ.1.94 கோடி மதிப்பிலான பல்வேறு அமைச்சர் தொடங்கி வைத்தார். 32 பயனாளிகளுக்கு பழுதடைந்த வீடுகளைப் புனரமைக்கும் வகையில் தலா ரூ.50,000 வீதம் 16 லட்சம் மதிப்பில் பழுது நீக்கிக்கொள்ளும் உதவித் தொகைக்கான ஆணைகளையும் அவர் வழங்கினார். ஆக மொத்தம்  ரூ.2.10 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே, இதற்கு முன்பு இரண்டு முறை பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை தம்பிதுரையோடு சேர்ந்து அமைச்சர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 செந்தில்பாலாஜி

 செந்தில் பாலாஜி தனது நெருக்கமானவர்களிடம், ``நான் எம்.எல்.ஏ-வாக இருந்தவரை ஒத்த பைசாவுக்குக்கூட அரவக்குறிச்சி தொகுதியில் திட்டங்களைச் செயல்படுத்தலை. ஏன்னா, அப்படி பண்ணினா, எனக்கு பேர் கிடைச்சுடும்ன்னு மக்களுக்கு விரோதமா செயல்பட்டார். நான் அதற்காக மூன்று இடங்களில் உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினேன். ஆனா, இப்போ எனது எம்.எல்.ஏ பதவி போனதும் போட்டிபோட்டுக்கொண்டு தம்பிதுரையும் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதிக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வர்றாங்க. என்ன பண்ணுனாலும் அரவக்குறிச்சி தொகுதியில் ஆளுங்கட்சி மண்ணையே கவ்வும்" என்று புலம்பினாராம்.