‘பெரியார் தோன்றாமலிருந்தால் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்!’ - அமைச்சர் கே.சி.வீரமணி | 'Hindi would have been imposed if Periyar did not appear!' - Minister KC Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (26/01/2019)

‘பெரியார் தோன்றாமலிருந்தால் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்!’ - அமைச்சர் கே.சி.வீரமணி

‘‘பகுத்தறிவு பகலவன் பெரியார் தோன்றாமலிருந்தால், தமிழகத்தில் எப்போதோ இந்தி திணிக்கப்பட்டிருக்கும்’’ என்று பெருமிதத்தோடு பேசினோர் அமைச்சர் கே.சி.வீரமணி.

அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூரில், அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், 25-ம் தேதி இரவு நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘தமிழ் இனத்துக்காகவும், தமிழ் மொழிக்காகவும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். பகுத்தறிவு பகலவன் பெரியார், தோன்றாமலிருந்தால் தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும். இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கும். மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து, மாநிலத்தின் உரிமை, மொழி, மக்களைக் காப்பதற்காகத் தந்தை பெரியார் நீதிக்கட்சி தொடங்கினார். 
பிறகு, திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். அதில், அண்ணா இணைந்தார். எம்.ஜி.ஆர் ஈர்க்கப்பட்டார். தலைவர்களெல்லாம், திராவிடர் கழகத்தில் இணைந்து கொண்டனர். நீதிக்கட்சி, திராவிடர் கழகத்தின் தொடர்ச்சியாக 80 ஆண்டுகள், தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது திராவிடக் கட்சி. இது வரலாறு. திராவிடப் பேரியக்கம் நிலைத்து நிற்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர்-தான். எம்.ஜி.ஆர் இல்லையென்றால், திராவிட இயக்கத்தை எப்போதோ அழித்திருப்பார்கள். இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்கள் பெரியாரும் அண்ணாவும். 

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

அவர்கள் வழியில் வந்த நாம், இன்று வரை அதைக் கடைப்பிடிக்கிறோம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தைச் சொன்னார் அண்ணா. நான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது, தார் எடுத்துச் சென்று ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழித்திருக்கிறேன்’’ என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ஜி.எஸ்.ஏ.ஆறுமுகம் உட்பட அ.தி.மு.க-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.