தாயும், குட்டியும் நடத்திய பாச போராட்டம்... சின்னத்தம்பி ஆபரேஷன் ரிப்போர்ட்! | Chinnathambi elephant translocated to Topslip

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (26/01/2019)

தாயும், குட்டியும் நடத்திய பாச போராட்டம்... சின்னத்தம்பி ஆபரேஷன் ரிப்போர்ட்!

கோவை சின்னத்தம்பி காட்டு யானையை, டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

சின்னத்தம்பி

கோவை வனப்பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற ஆண் காட்டு யானை இன்று டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கண்காணிக்கப்பட்டு வந்த சின்னத்தம்பி யானைக்கு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் முதல் ஊசி செலுத்த முயற்சி செய்யப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6.30 மணியளவில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக சின்னத்தம்பியின் உடலில் பாய்ந்தது. ஆனால், சின்னத்தம்பி தொடர்ந்து வனப்பகுதியில் முன்னேறவே, வனத்துறையினர் அதை ஃபாலோ செய்தனர். சின்னத்தம்பியை எப்படியும் பிடித்துவிடலாம் என்று நினைத்தபோதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சின்னத்தம்பியுடன், ஒரு பெண் மற்றும் குட்டி யானைகள்  இருந்தன. அவை இரண்டும், சின்னத்தம்பி யானை அருகே யாரையும் நெருங்கவிடவில்லை. வனத்துறைக்கு சிம்மசொப்பனமாக நின்று பெண் யானை பிளிறியது. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகுதான் சின்னத்தம்பியிடம் இருந்து, தாய் மற்றும் குட்டி யானையை பிரிக்க முடிந்தது.

சின்னத்தம்பி

இதைத்தொடர்ந்து, கயிறு கட்டி, கும்கிகள் மற்றும் ஜே.சி.பி உதவியுடன் சின்னத்தம்பி யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அதுவும் எளிதாக நடக்கவில்லை. கயிறு கட்டி இழுக்கும்போது, எதிர்பாராத விதமாக சின்னத்தம்பி யானை ஜே.சி.பி-க்குள் சிக்கிவிட்டது. மறுபக்கம் கும்கி யானை பொம்மன் சின்னத்தம்பியின் பின்னால் இருந்து குத்தியது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சின்னத்தம்பி யானை லாரியில் ஏற்றப்பட்டது. ஆனால், அதற்குள் யானையின் தந்தம்  உடைந்து, உடம்பில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் சின்னத்தம்பி யானையை விட்டனர்.

சின்னத்தம்பி

"விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை இடமாற்றம் செய்த அதிகாரிகள், அதே பகுதியில் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கும் செங்கல் சூளை நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களா?" என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.