41 நாள்களில் செந்தில்பாலாஜிக்கு முக்கிய பதவி... பின்னணி என்ன? | This is the background of Senthilbalaji's reign in 41 days

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (26/01/2019)

கடைசி தொடர்பு:10:36 (26/01/2019)

41 நாள்களில் செந்தில்பாலாஜிக்கு முக்கிய பதவி... பின்னணி என்ன?

''அந்தக் கூட்டம் நடந்த மூன்றாம் நாளே செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மூலமாக வழங்கி, சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் ஸ்டாலின்'' என்கிறார்கள்.

41 நாள்களில் செந்தில்பாலாஜிக்கு முக்கிய பதவி... பின்னணி என்ன?

.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கடந்த மாதம் 14-ம் தேதிதான் தி.மு.க-வுக்குத் தாவினார். கட்சியில் சேர்ந்து 41 நாட்களிலேயே செந்தில்பாலாஜிக்கு, கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கி, புதிய வரலாறு படைத்திருக்கிறார், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். இது, தி.மு.க-வினர் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது.      

 ஸ்டாலினோடு செந்தில்பாலாஜி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனோடு 18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்கம் சம்பந்தமான வழக்கின் மேல்முறையீடு, அ.தி.மு.கவையும், அ.ம.மு.க-வையும் இணைக்க நடந்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக, கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.க-வில் ஐக்கியமானார். அதோடு, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்டாலினை அழைத்துவந்து கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, தன்னோடு 30,425 பேரைத் தி.மு.க-வில் இணைத்து ஸ்டாலினையே திக்குமுக்காட வைத்தார்.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கரூருக்கு ஸ்டாலினை அழைத்துவந்து, தான் எம்.எல்.ஏ-வாக இருந்த அரவக்குறிச்சி தொகுதிக்குள் இரண்டு இடங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தினார். அதே தொகுதி எல்லைக்குள் வரும் நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்குப் பின்னே உள்ள காலி இடத்தில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தையும் நடத்தினார். ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் தனி எண், அடையாள அட்டை என்று செந்தில்பாலாஜி நேர்த்தியாகச் செய்த ஏற்பாட்டைப் பார்த்து, ஸ்டாலினே வாயடைத்துப் போனதாகச் சொல்கிறார்கள். அதன்விளைவு, ''அந்தக் கூட்டம் நடந்த மூன்றாம் நாளே செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மூலமாக வழங்கி, சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் ஸ்டாலின்'' என்கிறார்கள்.

நன்னியூர் ராஜேந்திரன்இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலர், "மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் கட்சியை வளர்க்கப் பாடுபடலை. அந்தப் பதவியில் எட்டு ஆண்டு இருந்தும், 'கரூர்ல தி.மு.கனு ஒரு கட்சி இருக்கா'னு கேட்கிற அளவுக்குத்தான் வெச்சிருந்தார். கரூர் மாவட்ட தி.மு.க-வில் பவர் பார்ட்டியாக இருந்த கே.சி.பழனிசாமியால் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டவர்தான் நன்னியூர் ராஜேந்திரன். ஆனால், கே.சி.பழனிசாமி இரண்டு வருஷமா தனது தொழிலில் நொடித்து, அரசியலில் துறவறம் பூண்ட நிலைக்கு வந்ததால், இரண்டு வருஷமா கட்சி துவண்டுக் கிடக்கு. அதனால், 'மாவட்டச் செயலாளரை மாத்தணும்'னு நாங்க தளபதிக்குக் கோரிக்கை வெச்சுக்கிட்டுதான் வந்தோம். ஆனால், அதற்காகக் கட்சிக்கு வந்து 41 நாளே ஆன செந்தில்பாலாஜிக்கு, அந்தப் பதவியைத் தூக்கிக் கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம்? கரூர் மாவட்டத்தில் தி.மு.க-வை வளர்க்க பாடுபட்ட எத்தனையோ முக்கியப் புள்ளிகள் இருக்கிறாங்க. முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனின் தம்பி ரவிக்குமார் இருக்கிறார். இன்னும் பல மனிதர்கள் இருக்கிறாங்க. அவர்களை விட்டுவிட்டு, செந்தில்பாலாஜிக்கு கொடுத்திருப்பது வேதனை. அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்ததன் மூலம், மற்ற மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர் பதவிவரை அவரது ஆள்களையே அவர் நியமிப்பார். காலங்காலமாகக் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள், அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்" என்று குமுறினார்கள். 

ஆனால், செந்தில்பாலாஜி ஆதரவாளர்களோ, "எங்கண்ணன் தி.மு.க-வுக்கு வருவதற்கு முடிவு பண்ணி ஸ்டாலினை சந்தித்தபோதே, கட்சியில் சேர்ந்தவுடன் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி தர வேண்டும்'னு உறுதி வாங்கிகிட்டுத்தான் கட்சி மாறினார். அதற்குப் பிரதிபலனா, கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க-வை ஜெயிக்கவைப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதன்படிதான், அண்ணனுக்கு முன்னாடியே தி.மு.க தலைமையிடம் போட்ட ஜென்டில்மேன் அக்ரிமென்ட்படி பதவி கிடைச்சிருக்கு. ஆனால், அண்ணனுக்கு இவ்வளவு சீக்கிரம் பதவி கிடைத்தற்குக் காரணம், 'தி.மு.க-வுக்குப் போனால் பதவி கிடைக்கும்' என்ற ஆசையை, அ.ம.மு.க-வின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களையும், அ.தி.மு.க-வினரையும் தி.மு.க நோக்கி வரவைக்க ஸ்டாலின் நினைப்பதுதான். இன்னும் புரியிற மாதிரி சொன்னா, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அதாவது, இன்னையோட 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டின் கடைசித் தேதி முடியுது. 

டி.டி.வி.தினகரன், ஒருவேளை மேல்முறையீடு பண்ணாத பட்சத்தில், மீதமுள்ள 17 முன்னாள் எம்.எல்.ஏ-க்களில் பலரும் அதிருப்தியாகி, செந்தில்பாலாஜி கைங்கரியத்தில் தி.மு.க-வுக்கு வர வாய்ப்பிருக்குனு கணக்கு பண்ணிதான், 24-ம் தேதி இரவு 9 மணிபோல் அவசரம் அவசரமாக செந்தில்பாலாஜியை மாவட்டப் பொறுப்பாளராக அறிவிக்க வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதோட, அண்ணனின் செயல்பாடுகளைப் பார்த்துட்டு வியந்து போய்தான், ஸ்டாலின் இவ்வளவு சீக்கிரம் அவருக்குப் பதவியை வழங்கி இருக்கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி, செந்தில்பாலாஜி 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்தார். ஆனால், அவர்களை இந்தக் கூட்டத்திற்கு வரவிடாமல் தடுக்க அண்ணனின் அரசியல் எதிரியான போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னன்னமோ பண்ணினார். ஆனா, அதையும் மீறித்தான் செந்தில்பாலாஜி அவ்வளவு கூட்டத்தை அன்றைக்குக் கூட்டினார். மேடைக்கு முன்னாடி 25 பாக்ஸ் போல் அமைத்து, ஒரு பாக்ஸுக்கு 960 பேரை அமரவைக்க சேர்கள் போட ஏற்பாடு செய்திருந்தார். மொத்தம் 25 பாக்ஸ்கள்.

ஒரு பாக்ஸைக் கவனிக்க, நான்கு பொறுப்பாளர்கள் போட்டிருந்தார். தி.மு.க-வில் சேர இருந்தவர்களுக்கு நம்பர், தனி ஐடி எல்லாம் கொடுத்திருந்தார். இன்ன நபர் இந்த பாக்ஸுக்குள்தான் அமரணும்னு முன்கூட்டியே கனகச்சிதமாக முடிவு பண்ணி, பொறுப்பாளர்கள் மூலமா அப்படியே செய்யவைத்தார். அன்னைக்கே அத பார்த்து, ஸ்டாலின் வியந்தார். அதேபோல், கடந்த 22-ம் தேதி கரூர் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் நடத்திய பூத் ஏஜென்ட்கள் கூட்டத்தையும் இப்படி பக்காவாக பிளான் பண்ணி நடத்தினார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 5,000 பூத் ஏஜென்ட்களை நியமித்தார். மொத்தம் 250 பூத்கள் இருக்கு. ஒரு பூத்துக்கு 20 பேர்களை நியமித்தார். ஒரு பூத்துக்கு, ஒரு தலைவரைப் பொறுப்பாளரா போட்டார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி நம்பர், ஐ.டி கொடுத்து அழைத்து வந்தார். ஸ்டாலினிடம் அந்த லிஸ்டைக் கொடுத்தது செக் பண்ணச் சொன்னார். தான் பேசுவதற்கு முன்பு, 27 பேர்களை மாத்திமாத்தி கூப்பிட்டார். அதற்குரிய நபர்கள் கையைத் தூக்கினார்கள். 'யாரும் ஆப்சென்ட் ஆகவில்லை, முறையான பட்டியல்' என்பதை ஸ்டாலின் புரிந்துகொண்டார். இந்தத் துல்லிய ஏற்பாடு தந்த ஆச்சர்யம் விலகாததால்தான், செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருந்த பப்ஃபே முறையிலான இரவு உணவைத் தொண்டர்களோடு நின்றபடி சாப்பிட்டார் ஸ்டாலின்" என்றார்கள். 


அரவக்குறிச்சி பூத் ஏஜெண்ட்கள்

இதுகுறித்து கரூர் மாவட்ட தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவர், " 'தி.மு.க-னா காங்கிரஸ் கட்சிபோல், குடும்பக் கட்சினு ஒரு பெயர் இருக்கு. கிளைச்செயலாளர்வரை குடும்ப அரசியலே பண்ணுவார்'னு ஒரு பார்வை இருக்கு. அதை உடைத்து, அ.தி.மு.க-வில் கட்சிக்காக உழைக்கும் யாருக்கும் பதவி கிடைக்கும்னு ஜெயலலிதா பண்ணியதுபோல், தி.மு.க தொண்டர்களையும் நம்ப வைக்கத்தான் செந்தில்பாலாஜிக்கு பதவி கொடுத்திருக்கிறார், ஸ்டாலின். செந்தில்பாலாஜி கட்சியை வளர்க்க இறங்கி வேலைப் பார்ப்பார். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஓர் ஊரைச் சேர்ந்தவர், கரூர் மாவட்ட நீதித்துறை முக்கியப் புள்ளி ஒருவரின் உதவியாளர். ஒருவாரத்திற்கு முன்பு அவர், இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறார். அப்போது,செந்தில்பாலாஜி ஒருத்தரோடு நடந்துபோயிருக்கிறார். ஆச்சர்யமாகிப்போன அவர், தனது பைக்கைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார். விடியற்காலை மூன்று மணிக்குக் கொண்டுவந்து வண்டியைக் கொடுத்திருக்கிறார், செந்தில்பாலாஜி.

பூத் ஏஜென்ட்களை நியமிக்க அப்படிப் போய் இருக்கிறார். முதலில், கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைப் பெற்றிருக்கிறார். கரூர் மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க வசமாக்கி, அதன்பிறகு அதைக் கொண்டு கொங்கு மண்டல அளவில் தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக மாறுவார். அதேபோல், அ.தி.மு.க-விலோ, அ.ம.மு.க-விலோ இரண்டு முக்கியப் புள்ளிகளை தி.மு.க-வுக்கு இழுக்கும் அசைன்மென்டையும் தனியே செய்துவருகிறார், செந்தில்பாலாஜி. ஆனால், கரூர் மாவட்ட தி.மு.க-வில் இனி அவரோடு வந்த அவரது ஆதரவாளர்களே கோலோச்ச முடியும். காலங்காலமாக தி.மு.க-வுக்கு உழைத்த புள்ளிகளும், தொண்டர்களும் தலையில் துண்டைப் போட்டுக்க வேண்டியதுதான்" என்றார் சோகமாக!


டிரெண்டிங் @ விகடன்