எடப்பாடி, ஓ.பி.எஸ் அவரச ஆலோசனை - தேர்தல் பணிக்குழுவில் மேலும் சிலருக்கு வாய்ப்பு? | admk election squad will changed

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (26/01/2019)

கடைசி தொடர்பு:15:09 (26/01/2019)

எடப்பாடி, ஓ.பி.எஸ் அவரச ஆலோசனை - தேர்தல் பணிக்குழுவில் மேலும் சிலருக்கு வாய்ப்பு?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்துப் பேச ஒரு குழு, பிரசாரம் வகுக்க ஒரு குழு, அறிக்கை தயாரிக்க ஒரு குழு என்று மூன்று குழுவினரை நியமித்து சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது அ.தி.மு.க தலைமை. இந்த மூன்று குழுவை பொறுத்தவரையிலும், கூட்டணி பற்றி பேசும் குழுவே பவர் ஃபுல் குழு என்றும், மற்ற இரண்டு குழுக்களும் டம்மி குழுக்கள் என்றே அ.தி.மு.க முக்கிய பிரமுகர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான மைத்ரேயன் பெயர் இந்த மூன்று குழுவிலும் இடம்பெறவில்லை. 

மைத்ரேயன்

வேண்டுமென்றே திட்டமிட்டு, கழற்றிவிடபட்டதாக மைத்ரேயன் டென்ஷன் ஆனார். அவரை போலவே இன்னொருவர் பொள்ளாச்சி ஜெயராமன். ஜெயலலிதா காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் அந்தத் தேர்தல் பணிக்குழுவில் இவரை இடம் பெற செய்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பதால் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதால், தவறாமல் தேர்தல் பணிக்குழுவில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், தற்போது இவரையும் தேர்தல் குழுவில் இருந்து கழற்றிவிட்டுள்ளனர். 

ஆனால், அதேநேரம் இவர்களைத் தவிர செம்மலை உட்பட வேறு சிலரை டம்மி குழுவில் இடம்பெற வைத்தனர். அந்தவகையில் அவர்களுக்கும் தலைமை மீது வருத்தம் இருந்தது. இப்படி இருக்கத் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக மைத்ரேயன் மீண்டும் பா.ஜ.க-வுக்கு தாவப்போவதாக அவரின் ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்தனர். இந்தத் தகவல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி காதுகளுக்கு எட்டியது. அதையடுத்து இன்று, குடியரசு தின விழா முடிந்ததும், கட்சியின் சீனியர் தலைவர்களுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ் அவரச ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். 

எடப்பாடி, ஓ.பி.எஸ்

அப்போது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் குழுக்களில் இடம்பெறாதவர்களின் பெயர்களையும் சேர்க்க முடிவெடுத்துள்ளார்கள். அதில், மைத்ரேயன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் அதிருப்தியாளர்களைத் திருப்திப்படுத்தி உற்சாகமாக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க அ.தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. தங்கள் பெயர் பவர்ஃபுல் குழுவில் இடம்பெறுமா அல்லது டம்மி குழுவில் இடம்பெறுமா என்கிற கேள்விக்குறியுடன் அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க