விருதுநகர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 35 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்! | Virudhunagar court sends 35 members of Jacto geo to 15 days judicial custody

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (26/01/2019)

விருதுநகர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 35 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

விருதுநகர் மாவட்டத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 35 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாக்டோ

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவைக் கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசின் நிலையை அறிந்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டங்களைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஜாக்டோ

இந்நிலையில், போராட்டங்களை ஒருங்கிணைத்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கண்ணன், ராமநாதன், வைரவன், கணேசன், செல்வராஜ் உள்ளிட்ட 35 பேரை நேற்று இரவு சூலக்கரை போலீஸார் கைது செய்தனர். இன்று அவர்கள் அனைவரும் விருதுநகர் குற்றவியல் நீதிபதி திலகேஸ்வரி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 35 பேரையும் பிப்ரவரி 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.