குளறுபடியாகும் கோகுல்ராஜ் கொலை வழக்கு! - அலட்சியமாகச் செயல்படுகிறதா சி.பி.சி.ஐ.டி? | CBCID is not giving full focus on Gokulraj murder case, alleges relatives

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/01/2019)

கடைசி தொடர்பு:18:10 (26/01/2019)

குளறுபடியாகும் கோகுல்ராஜ் கொலை வழக்கு! - அலட்சியமாகச் செயல்படுகிறதா சி.பி.சி.ஐ.டி?

கோகுல்ராஜ்

குழறுபடியாகும் கோகுல்ராஜ் கொலை வழக்கு. உள்குத்து செய்கிறதா சி.பி.சி.ஐ.டி ?
சேலம் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் சக கல்லூரி மாணவியான ஸ்வாதியோடு பழகியதால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்தச் சென்ஸ்டிவான வழக்கை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி தன் தரப்பு அரசு சிறப்பு வழக்கறிஞர் யார் என்று தெரிவிக்காமல் விநோதமாகக் கையாண்டு வருகிறது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுபடி நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினார்.

கருணாநிதி

அரசு இவ்வழக்கின் சிறப்பு வழக்கறிஞராக முதலில் கருணாநிதியை நியமித்தது. பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுபடி அரசு ப.பா.மோகனைச் சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. சி.பி.சி.ஐ.டி இதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருவரையும் வைத்துக்கொண்டு மௌனமாக இருந்தது. ப.பா.மோகன் ஆஜரான பிறகு ஸ்வாதி உட்பட முக்கிய சாட்சிகளை மீண்டும் விசாரிக்க நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அதிலிருந்து இவ்வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி நீதிபதி இளவழகன் அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தாக்கல் செய்த மறு விசாரணை மனுவைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ``இவ்வழக்கில் முதலில் அரசு சிறப்பு வழக்கறிஞராகக் கருணாநிதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் மனுத்தாக்கல் செய்ய முடியும். நீங்கள் மனுத்தாக்கல் செய்ய உரிமை இல்லை’’ என்றார். அதற்கு ப.பா.மோகன், ``நான் உயர் நீதிமன்ற உத்தரவுபடி அரசால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளேன்’’ என்றார். அதற்கு நீதிபதி, ``அவரும் அரசால்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்’’ என்றதையடுத்து ப.பா.மோகன் நீதிமன்றத்தைவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

ப.பா.மோகன்

இதுபற்றி கோகுல்ராஜின் நண்பரும் வழக்கறிஞருமான சந்தியூர் பார்த்திபன், ``நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ப.பா.மோகன் இவ்வழக்கை நடத்த வேண்டும் என்றோம். ஆனால், அரசு கருணாநிதியை நியமித்தது. அவர் நியாயமாகச் செயல்படுவார் என்று நம்பினோம். ஆனால், சாட்சிகளிடமோ சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடமோ வழக்கு சம்பந்தமாகப் பேசுவதில்லை. சம்பவ இடங்களைப் பார்க்கவில்லை. பிறழ் சாட்சிகளிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கவில்லை. மொத்தத்தில் அவருக்கு இவ்வழக்கு பற்றி துளியும் அக்கறை இல்லை. இவ்வழக்கை நடத்தும் சி.பி.சி.ஐ.டி இதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை.

பார்த்திபன்
பாதிக்கப்பட்ட நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று வாதிட்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமிக்கப்பட்டார். அப்போதாவது சி.பி.சி.ஐ.டி தன் வழக்குக்கு மாறாகச் செயல்படும் கருணாநிதியை மாற்றிவிட்டு ப.பா.மோகனை முழுமையாக வாதிட முயன்றிருக்க வேண்டும். ஆனால், சி.பி.சி.ஐ.டி கருணாநிதியை வைத்துக்கொண்டு இந்த வழக்கை மெத்தனமாக நடத்துகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி வழக்கைப் பற்றி கண்டுகொள்ளுவதும் இல்லை. நீதிமன்றம் பக்கம் எட்டிப் பார்ப்பதும் இல்லை. அரசும் சி.பி.சி.ஐ.டி-யும் சேர்ந்து இந்த வழக்கை நீர்த்துப்போக முயல்கிறார்கள்’’ என்றார்.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி-யும், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியுமான கிருஷ்ணன், ``இது பெரிய விஷயமே இல்லை. நாங்கள் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட கருணாநிதி, ப.பா.மோகன் இருவரிடமும் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நேரில் சந்திக்கும்போது இதுபற்றி விரிவாகப் பேசுகிறேன்’’ என்றார்.