"இனி, பட்டாசுத் தொழில் கேள்விக்குறிதான்!" - புலம்பும் பட்டாசு உற்பத்தியாளர்கள்! | Cracker factories closed for two and half months: 1300 crore business affected

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (26/01/2019)

கடைசி தொடர்பு:17:14 (26/01/2019)

"இனி, பட்டாசுத் தொழில் கேள்விக்குறிதான்!" - புலம்பும் பட்டாசு உற்பத்தியாளர்கள்!

"பட்டாசு உற்பத்தியால் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வர்த்தகம் இருக்கும். ஆனால் தற்போது உற்பத்தி இல்லாததால், இரண்டரை மாதங்களில் மட்டும் ரூ.1,300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது."

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி கடந்த இரண்டரை மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.1,300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்த தொழிலாளர்களும் குடும்பத்தின் பசியைப் போக்க வேறு தொழிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

விவசாயம் பொய்த்துப்போன விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பட்டாசுத் தொழில்தான் கைகொடுத்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான தொழில் இதுதான். சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பட்டாசு ஆலைகளை நம்பி நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் பேர் வாழ்க்கை நடத்திவருகின்றனர். இங்கே தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

பட்டாசு ஆலை

இந்நிலையில் பட்டாசு உற்பத்தி தொடர்பாக அக்டோபர் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது. அதில், "பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது; சரவெடி தயாரிக்கக் கூடாது; பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட்தான் முக்கியமான மூலப்பொருள் என்பதால் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், 8 லட்சம் தொழிலாளர்களுக்கும் பேரிடியாய் விழுந்தது. இதனால் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகள் எல்லாம் தற்போது வேலையின்றிப் பூட்டிக் கிடக்கின்றன.

தங்கள் வாழ்வாதாரமே பட்டாசுத் தொழில்தான். அது, இல்லை என்றால் தங்கள் வாழ்க்கையை நடத்தவே முடியாது என்பதை அனுபவரீதியில் உணர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கஞ்சிகாய்ச்சும் போராட்டம், ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் எனத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்களின் ஒரே கோரிக்கை ஆலைகள் திறக்கப்பட வேண்டும். தங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான். கதறுபவர்கள் ஏழைத் தொழிலாளர்கள்தான் என்பதாலோ என்னவோ, இவர்களின் குரல் மட்டும் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ இன்னும் கேட்கவில்லை.

தொழிலாளர்கள்

எங்கிருந்தோ வந்தவர்களுக்கெல்லாம் வேலைக் கொடுத்து அவர்களை இங்கேயே அடைக்கலம் கொடுத்து தங்கவைத்த சிவகாசி, இன்று தன் சொந்த ஊர்க்காரர்களுக்குக்கூட வேலைக் கொடுக்க வழியில்லாமல் அவர்களை ஊரைவிட்டு வெளியூர்களுக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ.- பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தேவா, "விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் பட்டாசு தொழிலில் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வர்த்தகம் நடைபெறும். விருதுநகர் மாவட்டத்தைத் தாண்டி வெளியூர்களில் ரூ.10,000 கோடி வரை விற்பனை இருக்கும். ஆனால் தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. உணவுப் பொருட்கள் விற்பனை, காய்கறி விற்பனை ஆகியன கால்வாசிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. மாதம் 125 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் இடத்தில் தற்போது 7 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின்றன.

தேவா

இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த தொழிலாளர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற கோயில்பட்டி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனர். பட்டாசுத் தொழிலுக்காக ஆலை உரிமையாளர்கள் வங்கியில் இருந்து ரூ.1,600 கோடி வரை கடன் வாங்கியுள்ளனர். ஆனால், தற்போது அந்தக் கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய பணமின்றி வங்கிகள் பிறருக்கு கடன் கொடுக்க முடியாத நிலையில் வங்கிப் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பட்டாசுத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறிதான். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசை நீக்காமல் இந்தத் தொழிலை மீட்டெடுப்பது என்பது மிகவும் சிக்கலானது" என்றார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, "சிவகாசிக்கு பட்டாசுத் தொழில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ 100 ஆண்டுகள் இருக்கும். தற்போது மாவட்டம் முழுவதும் 1,070 ஆலைகள் உள்ளன. பட்டாசு தயாரிப்பில் நேரடியாக மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். குழாய்ச் சுற்றுதல், பிரின்டிங், போக்குவரத்து உள்ளிட்ட இதனோடு தொடர்புடைய தொழில்களில் 5 லட்சம் பேரும் உள்ளனர். இதற்குமுன் சின்னச்சின்ன பிரச்னைகள் இருந்தன. ஆனால், இந்த ஆண்டுதான் இத்தனை நாட்களாக ஆலையையே திறக்க முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆசைத்தம்பி

பட்டாசு உற்பத்தியால் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வர்த்தகம் இருக்கும். ஆனால் தற்போது உற்பத்தி இல்லாததால், இரண்டரை மாதங்களில் மட்டும் ரூ.1,300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சிவகாசி மட்டுமின்றி தற்போது ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும் முடங்கிப் போயுள்ளது" என்றார்.

"இதன் உபதொழிலான பிரின்டிங் தொழிலில் சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். காலண்டர், டைரி தயாரிப்பு என்பது வருடத்தின் கடைசி 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் அட்டைப் பெட்டி தயாரித்தல், லேபிள், கலர் காகிதம் பணிகள் 9 மாதங்கள் இருக்கும். 70 சதவிகித பிரின்டிங் பணி என்பது பட்டாசுத் தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக இப்போதெல்லாம் ஆர்டர் கிடைத்துவிடும். ஆனால், தற்போது வேலைநிறுத்தத்தால் எங்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை" என பிரின்டிங் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.

போராட்டம் நடத்திவரும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் பலருடைய குரலாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்