`எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இருக்கிறது!’ - கமல்ஹாசன் விமர்சனம் | MNM chief kamal hassan participates grama sabha meeting in cuddalore village

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:19:06 (26/01/2019)

`எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இருக்கிறது!’ - கமல்ஹாசன் விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடலூர் மாவட்டம் குனமங்கலம் மற்றும் அழகியநத்தம் கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கமல்ஹாசன்

கிராம மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ``எல்லோரும் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சிலவற்றில் தவறிவிட்டோம். நானும் அதில் அடக்கம். இப்போது செய்யலாம் என்று தற்போது நான் உங்களை நாடி வந்துள்ளேன். 25 வருட காலமாக இப்படி ஒரு கிராம சபைக் கூட்டத்தில் நாம் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகளைச் செய்யாமல் விட்டுவிட்டோம். கிராமசபை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பூஜை செய்து வந்துள்ளோம். இது நல்லதல்ல. நான் இப்படிப் பேசுவதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். 

நான் உங்களை நேரடியாகக் கண்ணைப் பார்த்துப் பேசினால் சிலவற்றைத் தங்கு தடையின்றி எடுத்துரைக்க முடியும். புதுமையான யோசனை வரும் என்ற அர்த்தத்தில் நேரடியாக உங்களை நான் பார்த்து பேசுகிறேன். கிராம பஞ்சாயத்து என்பது நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய கடமையாகும்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் ரூ.10,000, ரூ. 5,000 அட்வான்ஸ் கொடுப்பார்கள் அதை வாங்கிவிட்டால் 5 வருடத்துக்கு நீங்கள் அடமானம் வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அவர்களிடம் நீங்கள் எதையும் கேட்க முடியாது. கஜா புயலுக்கு மத்திய அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஆனால், பொங்கல் பரிசாகக் கொடுக்க ரூ.2,000 கோடி எங்கிருந்து வந்தது. இதை எல்லாம் நீங்க கேட்க வேண்டும். கணக்குக் கேட்பது உங்கள் உரிமை; பதில் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை. கணக்குக் கேட்பது என்பது சேமிப்பின் அடித்தளம். கிராமசபைக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் என்ன? குளம் எப்போது வெட்டப் போறீங்க? கிராமத்துக்கு என்ன செய்யப்  போறீங்க என்று தைரியமாகக் கேள்வி கேட்க வேண்டும்’’ என்றார்.

கமல்ஹாசன்

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திமா பீவி என்ற பெண் எழுந்து, ``நீங்கள் பேசும்போது எல்லோரும் கைதட்டுகிறார்கள், வரவேற்கிறார்கள். அப்புறம் எழுந்து சென்றுவிடுகிறார்கள். நான் கேள்வி கேட்டால் வாயாடி என்று கூறுகிறார்கள்’’ என்றார். அதற்குக் கமல்ஹாசன், ``என் அண்ணன் கமல்ஹாசன்தான் இப்படிக் கேட்கச் சொன்னார் என்று கூறி அதிகாரிகளிடம் கேளுங்கள்’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ``பஞ்சாயத்துத் தேர்தலை அரசு நடத்த வேண்டும். அது நடத்தினால்தான் கிராமங்கள் முன்னேறும். பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தப் பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் வீட்டில் குரல் கொடுத்தால் அது நடக்கும், அதைப்போல நீங்கள் தெருவில் வந்து குரல் கொடுத்தால் தானாகத் தேர்தல் நடக்கும். 2 விஷயங்கள் நீங்கள் செய்ய வேண்டும் ஒன்று தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், இரண்டு வருடத்தில் 4 முறை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ``கடந்த 25 வருடங்களாக நாம் கிராம சபையைப் பயன்படுத்தத் தவறிவிட்டடோம். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன். உள்ளாட்சி தேர்தல் நடத்தினால்தான் கிராமங்கள் முன்னேறும். அரசின் பல திட்டங்கள் கிராமங்களுக்குக் கிடைக்கும், கிராமசபைக் கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றிச் செயல்படுத்த முடியும், ஆனால் இந்த அரசு எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக உள்ளது’’ என்றார்.