'சூஸ் தி பெஸ்ட்' இல்லை... 'கோடிட்ட இடத்தை நிரப்பு' இருக்கு! ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மாற்றங்கள் | Plus two public examination changes made by the Government

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (26/01/2019)

கடைசி தொடர்பு:18:24 (26/01/2019)

'சூஸ் தி பெஸ்ட்' இல்லை... 'கோடிட்ட இடத்தை நிரப்பு' இருக்கு! ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மாற்றங்கள்

"இந்தக் கல்வியாண்டில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் இல்லாத வினா முறைக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதும் மாணவர்களுக்கு நிச்சயம் சவாலான ஒன்றாகத்தான் இருக்கும்."

ப்ளஸ் ஒன், ப்ளஸ்-டு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை, தேர்வுத்துறை சார்பாக வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் அடிப்படையில்தான் வருகிற பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் இருக்கும் எனத் தேர்வுத்துறை சார்பாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்வு நேரத்தில் மாற்றம், மதிப்பெண்களில் மாற்றம் போன்றவை கொண்டுவரப்பட்டு அதற்கு மாணவர்கள் பயிற்சி பெற்று, தேர்வுக்குத் தயாரான பின் வினாத்தாளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் மாணவர்களுக்கு,பொதுத்தேர்வு பற்றிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு

இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நடைமுறையில் இருக்கும் வினாத்தாள் வடிவமைப்பின்படி, செய்முறைத் தேர்வு இருக்கும் பாடங்களான வேதியியல், விலங்கியல், இயற்பியல், கணிப்பொறி அறிவியல் போன்ற பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணில் தேர்வு நடைபெறும். இதில் 15 மதிப்பெண்ணுக்கு, சரியான விடையைத்தேர்வு செய்யும் வகையிலான ஒரு மதிப்பெண் வினா இடம்பெறும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களான மொழிப் பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கு 90 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறும். இதில் 20 மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள்  இடம்பெறும்.

பள்ளித்தேர்வுகளை பொறுத்த வரை ஒரு மதிப்பெண் வினா என்றாலே சரியானவிடையைத் தேர்வு செய்து எழுதும் வினா வடிவமைப்புதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளில் ஆப்டிட்யூட் வினாக்கள்தான் அதிகமாகக் கேட்கப்படுகின்றன. அதாவது கோடிட்ட இடத்தை நிரப்புக ஸ்டைலில் கேட்கப்படும் கேள்விகள். பாடங்களில் சரியான புரிதல் இருந்தால் மட்டுமே இந்த வகை வினாக்களுக்கு மாணவர்களால் பதிலளிக்க முடியும். இதனைக் கருத்தில் சொண்டு, மாணவர்களை நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் வினாக்கள் மாற்றப்படுவது குறித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்து கேட்டோம்.

தேர்வு

சத்யமூர்த்தி - ஆசிரியர், விழுப்புரம்:

''பள்ளிகளில் தற்போது 'மாதிரி செய்முறைத் தேர்வுகள்' நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி ஒன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. தேர்வுத்தாளில் ஏற்பட்டு இருக்கும் இந்தத் திடீர் மாற்றத்தை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குக்கூட கால அவகாசம் எங்களுக்கு இல்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி, கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், கல்வியாண்டின் தொடக்கத்திலே இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால்,ஆசிரியர்கள் அதற்குத் தகுந்தாற் போன்ற பயிற்சிகளை வழங்கியிருப்போம். தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களும் சிரமப்பட வேண்டியது இருந்திருக்காது. மேலும், இந்தக் கல்வியாண்டில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் இல்லாத வினா முறைக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதும் மாணவர்களுக்கு நிச்சயம் சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். எனவே இந்தப் பொதுத்தேர்வை பழைய வினாத்தாள் முறையிலேயே நடத்தி, அடுத்த ஆண்டு முதல் இதனை அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்''.

கண்ணன் - பள்ளி மாணவர், விழுப்புரம்:

''வினாத்தாளில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வினாவுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுவதற்குத்தான், ஓராண்டு காலமாக எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளனர்.ஆனால் அரசால் செய்யப்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு இன்னும் குறைவான நாள்களே உள்ள நிலையில் புதுவிதமான வினாத்தாளுக்குப் பயிற்சி பெறுவது நிச்சயம் சிரமமாக இருக்கும். இதனால் மதிப்பெண்கள் குறைவதற்குக்கூட வாய்ப்பு உள்ளது. எனவே வினாத்தாள் வடிவமைப்பு மாற்றத்தை அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தினால் உதவிகரமாக இருக்கும்'' என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்