``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு | Lenin's statue by Artist Chandru located in Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (26/01/2019)

கடைசி தொடர்பு:18:51 (26/01/2019)

``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு

"திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட தகவலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகுந்த சோகத்தோடு சொன்னார்கள். அப்போது நான் சிலை அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் கூறினேன். சமத்துவத்துக்காகப் போராடிய லெனினை ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக மட்டும் குறுக்கிவிட முடியாது. உலகம் முழுமைக்கும் பொதுவானவர் அவர்."

``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு

``லெனின் சிலையைக் காண தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், `எங்கள் தலைவருக்கும் சிலை இருக்கு’ என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். அந்த மகிழ்ச்சியைக் கண்டு நானும் சந்தோசப்பட்டேன்’’ என ஓவியர் சந்ரு பெருமையடைந்தார்.

கலை பண்பாட்டுத்துறை மற்றும் ஓவிய நுண்கலைக் குழு சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இதில் பென்சில் ஓவியம், பேனா ஓவியம், ஆயில் பெயின்ட்டிங், அக்ரிலிக் போன்ற ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியைக் கவின்கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்ரு தொடங்கி வைத்தார். ஜனவரி 29-ம் தேதி வரை தினமும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.

ஓவியம்

ஓவியர் சந்ரு பேசுகையில், ``ஓவியம் மட்டுமே கலை கிடையாது. கலை என்பதே பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல்தான். ஒரு நிகழ்வைப் பதிவு செய்வதே கலை. எழுத்து, சமையல், செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவது எல்லாம் கலைதான். ஆனால், இன்றோ வருமானத்துக்காக வரைபவர்கள் மட்டுமே ஓவியர் என்ற மனநிலை உள்ளது. விருது வாங்குவதுதான் ஓவியம் என்ற நிலை உள்ளது. ஆனால், எல்லோருமே ஓவியர்கள்தான். ஓவியம் எல்லோரும் வரைவார்கள். சிலருக்கு மட்டுமே கார்ட்டூன் வரும். அவர்களுக்கு இயல்பிலேயே அந்தச் சிந்தனை இருக்கிறது.

ஓவியர்

கோயில்கள் என்பவை சாமி சிலைகள் மட்டும் கிடையாது. அங்கே நிறைய ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. அவையெல்லாம் வரலாறு. நிறையக் கலைநயங்கள் கொண்ட இடம்தான் கோயில். சாமியை மட்டும் காரணம் காட்டி கோயிலுக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது. கோயில்களில் உள்ள கலைநயங்களை ரசிக்க வேண்டும். நேரத்தைச் சரியான முறையிலும், மகிழ்ச்சியான முறையிலும் போக்குவதற்கு கலை உதவும். நம் மனம், சமூகம், இனம், மொழியின் பிரதிபலிப்புதான் ஓவியம். சமூக சிந்தனையோடு கலை இருக்க வேண்டும்.

ஓவியம்

இதுவரை நான் செய்த சிலைகள் எல்லாம் ஆர்டர் வாங்கிக் கொண்டு செய்யப்பட்டவை. ஆனால், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள லெனின் சிலை உருவாக்கம் என்பது நானாக விரும்பி எடுத்துக் கொண்ட பணி. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட தகவலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகுந்த சோகத்தோடு சொன்னார்கள். அப்போது நான் சிலை அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் கூறினேன். சமத்துவத்துக்காகப் போராடிய லெனினை ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக மட்டும் குறுக்கிவிட முடியாது. உலகம் முழுமைக்கும் பொதுவானவர் அவர். எனவே அவர் சிலையை வடிவமைப்பதை என் கடமையாக நினைத்து உருவாக்கினேன்.

ஓவியம்

ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் சிலையை உருவாக்க ஆரம்பித்தேன். ஆனால், தற்போது உலகம் முழுவதும் இருந்து நிறைய பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்த மண்ணில் எத்தனையோ சிலைகள் செதுக்கப்பட்டிருந்தாலும் லெனின் சிலை உருவாக்கம் என்பது அதில் இருந்து மாறுபட்டது. அந்தச் சிலையைப் பார்வையிட்ட தோழர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி போன்றோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலை திறப்பு விழாவுக்காகத் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் எங்கள் தலைவருக்கும் சிலை இருக்கு என உணர்ச்சிவயப்பட்டனர். அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது’’ எனத் தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்