`நிறுத்தப்பட்ட கோட்டை அமீர் விருது!’ - குடியரசு தின கலாட்டா | kottai ameer award stopped this republic day function

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (26/01/2019)

`நிறுத்தப்பட்ட கோட்டை அமீர் விருது!’ - குடியரசு தின கலாட்டா

மத நல்லிணக்கத்திற்காக ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்படும் 'கோட்டை அமீர்' விருது இந்தாண்டு வழங்கப்படவில்லை. 

1997 கோயம்புத்தூர் கலவரத்தின் போது, இந்து - முஸ்லீம் நல்லிணக்கத்துக்காக அரும்பாடுபட்ட கோட்டை அமீர் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார். அவரது நினைவாக, மத நல்லிணக்கத்துக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் 'கோட்டை அமீர்' விருது வழங்கப்படுகிறது. ஒரு தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தோடு பாராட்டுச் சான்றிதழும் இவ்விருதில் வழங்கப்படும்.

கோட்டை அமீர் விருது தமிழ்நாடு அரசு

2001-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இவ்விருது வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுல்தான் மொஹைதீனில் தொடங்கி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.சாதிக் பாஷாவுக்கு 2018-ல் வழங்கியது வரையில், இதுவரை எட்டு பேர் 'கோட்டை அமீர்' விருதை பெற்றுள்ளனர். கடந்தாண்டு இவ்விருதை எடப்பாடி பழனிசாமிதான் வழங்கினார். சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்ட 'கோட்டை அமீர்' விருது, இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஜவாஹிருல்லா

இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, "சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட 'கோட்டை அமீர்' விருதை எடப்பாடி பழனிசாமி அரசு வழங்காதிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத நல்லிணக்கத்தில் அவர்கள் எவ்வளவு ஈடுபாடுடன் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர். எதற்காக அவ்விருது வழங்கப்படவில்லை என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்!" என்றார்.

நாமும், எதற்காக விருது வழங்கப்படவில்லை? என்பதை அறிய சில அரசு உயரதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ''லீவ்ல இருக்கோம், மண்டே வாங்க விரிவா பேசலாம்'' என்றபடியே இணைப்பை துண்டித்தனர். இந்தாண்டு மட்டும் விருது வழங்குவதை நிறுத்தியுள்ளார்களா?, அல்லது நிரந்தர நிறுத்தமா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.