`குடியரசு தின விழாவில் விவசாயிகளை அரைநிர்வாணத்தோடு காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது!' - நல்லசாமி | Republic day parade: Portraital of farmers inTN tableau is not acceptable, says Nallasamy

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (26/01/2019)

`குடியரசு தின விழாவில் விவசாயிகளை அரைநிர்வாணத்தோடு காட்சிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது!' - நல்லசாமி

கள் நல்லசாமி பேட்டி

 டெல்லியில் நடைபெற்ற 70 வது இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில்,விவசாயிகளை அரை நிர்வாணத்தோடு காட்சிப்படுத்திய நிகழ்வுக்கு தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி கூறுகையில், ``சமீபத்தில் ஜனவரி 21 ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அஸ்வமேத யாகம் ஊர்வலமாக ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முதல் லாங்ஸ் கார்டன் வரை நடத்தப்பட்டது. இந்த யாகத்தின் மூலம் `கள் என்பது உடல் நலத்துக்கு நன்மை தரக்கூடியது' என்ற கோரிக்கையை வைத்து நடத்தப்பட்ட இந்த யாகத்தின்போது நடந்த பேரணியில் பொது அட்டை குதிரை ஒன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து அட்டைக் குதிரையை தடுத்து நிறுத்தினால், அதற்கு பதிலாக தடுத்து நிறுத்திய அவர்கள், கள் என்பது எப்படி உடலுக்கு தீங்கு தரக்கூடியது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். 'அப்படி நிரூபித்தால், நிரூபிக்கும் நபருக்கு 10 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்'  'என்றும், அதன்பிறகு தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்து யாகம் நடத்தினோம். இந்த கோரிக்கை நியாயமானது என்பதால் யாரும் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

கள் நல்லசாமி

 எனவே,இந்த கோரிக்கையை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்று இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவை டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறை சார்ந்த வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்ட வாகனத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வலம் வந்தது.

குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தி

Photo Credit: DD NATIONAL

இதனை இந்திய நாட்டின் பிரதமர் உள்பட பலரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தமிழக அரசின் சார்பில் விடப்பட்ட ஊர்தியில் விவசாயம் குறித்து ஒரு ஊர்தி வந்தபோது, அதில் அரை நிர்வாணமாக விவசாயி காட்சிப்படுத்தப்பட்டு நகர்வலம் வந்தார். இந்த சம்பவம் பல மாநில விவசாயிகளை,பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லி வீதியில் வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில், அரைநிர்வாணமாக காட்சிப்படுத்தியது ஒரு விவசாய விரோத போக்கினை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின்போது, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயி தங்கவேல் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரை அரை நிர்வாணத்தில் பொதுவெளியில் வந்து அரசுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறிக் கைதுசெய்து சிறையில் அடைத்தது தமிழக அரசின் காவல்துறை. தற்போது நடைபெற்றுள்ள டெல்லி சம்பவம் ஒரு அரசே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பதை தமிழ்நாடு கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக தமிழக விவசாயியை டெல்லியில் அவமானப்படுத்திய இந்த செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும். இல்லை என்றால்,போராட்டம் வெடிக்கும்’’ என்றார்.