ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை முடக்க அரசு தீவிரம் - புதுக்கோட்டை நிர்வாகிகள் 14பேர் சஸ்பெண்ட் | Jacto-geo pudukkottai Executives suspend

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:03:00 (27/01/2019)

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை முடக்க அரசு தீவிரம் - புதுக்கோட்டை நிர்வாகிகள் 14பேர் சஸ்பெண்ட்

தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோவின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் 14பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜாக்டோ ஜியோ

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த 22ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் வகுப்புகளை புறக்கணித்து முற்றுகை போராட்டம், சாலை மறியல் என பல்வேறு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோடு, காவல்துறை மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ திருச்சி நிர்வாகிகள் நீலகண்டன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளான பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், சாலைசெந்தில்குமார, முத்துசாமி, கோலோச்சி, உள்ளிட்ட 14 பேரை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


[X] Close

[X] Close