20 மணி நேர சித்தரவதை - ஆரவாரமின்றி அமைதியாகச் சென்ற சின்னத்தம்பி யானை! | Coimbatore Chinnathambi elephant translocated to Varakaliyar

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (27/01/2019)

20 மணி நேர சித்தரவதை - ஆரவாரமின்றி அமைதியாகச் சென்ற சின்னத்தம்பி யானை!

“அது நினைச்சா ஒரு நாளுக்கு நூறு பேரைக் கூட அடிக்கலாம். ஆனா, இதுவரை ஒருவரை கூட அது அடிச்சதில்லை. விநாயகன், சின்னத்தம்பி இருந்தனால கேரளாவுல இருந்து இங்க யானைங்க வராம இருந்துச்சு. இப்ப அவங்க இரண்டு பேருமே இல்ல. இனிதான் பிரச்னையே தொடங்கப்போகிறது”

கோவை வனப்பகுதியில் நீண்ட ஆண்டுகளாகச் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சின்னத்தம்பி யானையை, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டாப்சிலிப் அருகே இடமாற்றம் செய்தனர். விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தாலும், ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு சின்னத்தம்பி இந்தப் பகுதியில் பிரபலம். மனிதர்கள் நேருக்கு, நேராக வந்தால் கூட தாக்காத சுபாவம் கொண்டது சின்னத்தம்பி.  இங்குள்ள பழங்குடி மக்களால் காட்டு ராஜா என்ற அன்புடன் அழைக்கப்படும்.

சின்னத்தம்பி

ஆரவாரமின்றி அமைதியாகச் சென்ற சின்னத்தம்பி யானை வீடியோ: http://bit.ly/2HC474q

“அவர் காட்டுக்கு மட்டும் ராஜா இல்ல. நாட்டுக்கே ராஜா. அவர் இருந்தவரை இங்கு தவறு செய்ய பயப்படுவார்கள். ஒரு சின்னத்தம்பியை பிடித்தால், இன்னொரு சின்னத்தம்பி வருவான்” என்கின்றனர் பழங்குடி மக்கள்.

“அது நினைச்சா ஒரு நாளுக்கு நூறு பேரைக் கூட அடிக்கலாம். ஆனா, இதுவரை ஒருவரை கூட அது அடிச்சதில்லை. விநாயகன், சின்னத்தம்பி இருந்தனால கேரளாவுல இருந்து இங்க யானைங்க வராம இருந்துச்சு. இப்ப அவங்க இரண்டு பேருமே இல்ல. இனிதான் பிரச்னையே தொடங்கப்போகிறது” என்கின்றனர் சின்னத்தம்பி, விநாயகனை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கவனித்து வருபவர்கள்.

இப்படிப்பட்ட ஓர் யானையை, மயக்க ஊசி போட்டு, கயிறு கட்டி, ஜே.சி.பி வைத்து தொந்தரவு செய்து, கும்கிகளால் தாக்கி, 12 மணி நேரம் லாரியில் வைத்து ஏராளமான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டன. லாரியில் கடும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட சின்னத்தம்பி, கீழே இறங்கியதும் முரண்டு பிடிப்பான் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலர், பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

ஆனால், லாரியில் இருந்து இறங்கியதும் அங்கிருந்த மனிதர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆரவாரம் இல்லாமல் அமைதியாகச் சென்றுவிட்டான் சின்னத்தம்பி. அங்கு தண்ணீர் மற்றும் உணவு சாப்பிட்டு சின்னத்தம்பி ஆரோக்கியமாக இருக்கிறான் என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கும் விஷயம்.