மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் ம.தி.மு.க - வரவேற்று போஸ்டர் அடித்த பா.ஜ.க! | Bjp members welcome banners to vaiko for black flag protest

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:37 (28/01/2019)

மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் ம.தி.மு.க - வரவேற்று போஸ்டர் அடித்த பா.ஜ.க!

மதுரை, தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் தெரிவித்திருந்தார். மேலும் சி.பி.ஐ-கூடக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்கள்  பறக்கவிடப்படும் எனவும் கூறியிருந்தார். 

வைகோ மட்டும் அல்லாது, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்திருந்தார். இப்படி இவர்கள் மதுரை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருக்கும் வேலையில். கறுப்புக்கொடி காட்ட வருபவர்களை வரவேற்கப் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் வரவேற்பு சுவரொட்டிகள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன. 

கறுப்புக்கொடி காட்ட வருபவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் பா.ஜ.க.வினரின் சுவரொட்டி

``கறுப்புக்கொடி காட்ட வரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் வரவேற்கிறோம். உங்களை வரவேற்று வழியனுப்ப வழி மீது விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்ற வசனங்களை அந்தச் சுவரொட்டி கொண்டுள்ளது.