`10 வி.ஐ.பி.க்களுக்கு  மட்டுமே அனுமதி; பலத்த பாதுகாப்பு' - மோடி விசிட்டால் பரபரப்பான மதுரை! | Prime minister modi visit at madurai

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:34 (27/01/2019)

`10 வி.ஐ.பி.க்களுக்கு  மட்டுமே அனுமதி; பலத்த பாதுகாப்பு' - மோடி விசிட்டால் பரபரப்பான மதுரை!

பிரதமர் மோடி இன்று மதுரை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசு விழா, கட்சி விழா நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அரசாணையை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கான அடிக்கல் நாட்ட இன்று மதுரை வருகிறார் மோடி. விமான நிலையம் அருகில் மண்டேலா நகரில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமருடன் ஆளுநர், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

காலை 11. 30 மணிக்கு மண்டேலா நகர் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிவிட்டு அதன் அருகில் நடைபெறும் தென்மண்டல பி.ஜே.பி. பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். எய்ம்ஸ் விழா மேடையில் பிரதமருடன் அமர 10 வி.ஐ.பி.க்களுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளது. ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் இவர்களுடன் கூடுதலாக மதுரை அமைச்சர்கள் இருவர், மதுரை, விருதுநகர் எம்பிக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கும், பி.ஜே.பி மாநில நிர்வாகிகளுக்குப் பார்வையாளர் வரிசையில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு வாரமாக மதுரையில் பிரதமர் விழா நடைபெறும் இடங்களை மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சன்முகராஜேஸ்வரன் தலைமையில் 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மண்டேலா நகர் வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலயத்திலும் இரண்டு மணி நேரம் விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் குறைவான அளவிலே பொது மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நகருக்குள் பல்வேறு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். வைகோ தலைமையில் மதிமுகவினர் மதுரையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.  அதனால் மதுரை மாநகரமே பரபரத்துக் கிடக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க