'100 நாள் வேலைப் பெண்களை மிரட்டி கிராமசபைக் கூட்டம்?' - கரூர் இளைஞர்கள் கொந்தளிப்பு! | controversy about karur grama sabha meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (27/01/2019)

'100 நாள் வேலைப் பெண்களை மிரட்டி கிராமசபைக் கூட்டம்?' - கரூர் இளைஞர்கள் கொந்தளிப்பு!

கடவூரில் முறைப்படி அறிவிக்காமல் 100 நாள் வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி அவசரம் அவசரமாகக் கிராமசபை கூட்டம் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய இளைஞர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கடவூர் ஊராட்சி

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் ஊராட்சியில்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஊராட்சியான கடவூர் ஊராட்சியில் 11, 000 வாக்காளர்களும்,15,000 க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.  'இந்த ஊராட்சியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை' என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், "எல்லோரையும் அழைத்து முறைப்படி கிராமசபைக் கூட்டம் நடத்தினால், பிரச்னையாகும் என்று பயந்து ஊராட்சி கிளர்க் பழனிவேலு, 100 நாள் வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி அவசரம் அவசரமாகக் கிராம சபை கூட்டத்தை நடத்திவிட்டார்" என்று வெடிக்கிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள். இந்த விவகாரம் கரூர் மாவட்டத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

கிராமசபை

இதுபற்றி, நம்மிடம் பேசிய கடவூர் ஊராட்சியைப் சேர்ந்த இளைஞர்கள் சிலர், "எங்க ஊராட்சியின் கிராமசபைக் கூட்டத்தை எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல், 100 நாள் வேலை பார்க்கும் அப்பாவி மக்களை வைத்து நடத்திவிட்டார் பழனிவேலு. கடவூர் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பஞ்சாயத்து ஆகும். ஆனால் இங்க அடிப்படை வசதிகளே இல்லாமல் பல ஆண்டுளாக அல்லாடி வருகிறோம்.  'எங்கள் பகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் என்ன நடந்துள்ளன' என்பதைப் பற்றியும், 'இதுவரை கிராமசபையில் முறையான கணக்கு வழக்குகளை ஒப்படைக்காதது' பற்றியும் இந்த வருட கிராமசபைக் கூட்டத்தில் நாங்கள் கேள்வி கேட்கலாம்ன்னு இருந்தோம். 


 ராஜேஸ்வரி


பழனிவேலு (கிளர்க்)ஆனா, 100 நாள் வேலைத்திட்டத்தில் பெண்களை ஒருங்கிணைக்கும் தற்காலிக ஊழியரான ராஜேஸ்வரி உள்ளிட்ட மூன்று பெண்கள் மூலமாக 100 நாள் வேலை செய்யும் பெண்களை, ஆண்களை மிரட்டி இப்படி கால் மணி நேரத்திற்குள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார் பழனிவேலு. கிராமசபைபற்றி எங்கள் ஊராட்சி செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டோம். எந்த பதிலும் இல்லை. பி.டி.ஓவை தொடர்புகொண்டோம். அவர் பேச மறுத்துவிட்டார். பின்னர் அம்மா அழைப்பு மையத்தை 1100 என்ற எண்ணில் அழைத்து புகார் கூறினோம். நடவடிக்கை இல்லை. தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. காரணம் கேட்டால் கிளர்க், 'நீங்க பஞ்சாயத்துக்கு எப்படியா இருந்தாலும் வந்துதான் ஆகனும். பார்த்து நடந்துக்குங்க. முடிந்ததை பாத்துக்குங்க'ன்னு  பேசினார். 

உடனே, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைக் கேட்டதுக்கு, 'நீங்க கிராமசபை கூட்டத்துல கலந்துகிட்டு, நாங்க சொல்ற இடத்துல கையெழுத்து போடலன்னா, உங்களுக்கு நாளையில் இருந்து வேலை கிடைக்காது'ன்னு மிரட்டி கலந்துக்க சொன்னதா சொன்னாங்க. அவங்ககிட்ட, கிராமசபையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினோம். உடனே, அதை ராஜேஸ்வரி தடுத்து எங்களை மிரட்டினாங்க. இந்த விவகாரத்தை நாங்க சும்மா விடப்போவதில்லை. இந்த ஊராட்சியில் பல லட்சம் முறைகேடு நடந்திருக்கு. அதை பற்றி யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி அவசரம் அவசரமாக கிளர்க் கிராமசபை கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, நடந்த தவறுகளை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனும். இல்லைன்னா, போராட்டம் வெடிக்கும்" என்றார்கள்.

 கடவூர் ஊராட்சியின் கிளர்க் பழனிவேலுவிடம் பேசினோம். "முறைப்படிதான் கிராமசபை கூட்டம் நடந்தது. எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை" என்று முடித்துக் கொண்டார்.