`நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் ' - மதுரையில் அடிக்கல் நாட்டினார் மோடி! | PM narendramodi lays foundation stone of AIIMS at Madurai,

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (27/01/2019)

கடைசி தொடர்பு:13:14 (27/01/2019)

`நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் ' - மதுரையில் அடிக்கல் நாட்டினார் மோடி!

மதுரை, தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார். 

மோடி

மதுரை விமான நிலையம் வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். 

மோடி

பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழா நடக்கும் மேடைக்கு வந்தார் மோடி. அங்கு அவருக்கு மீனாட்சியம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விழா மேடையில் மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், பொன். ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் போன்றவர்கள் இருந்தனர். இறுதியாக  ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு போன்றவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. மேலும் மதுரை அருகே எய்ம்ஸ் அமைந்தாலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அப்பகுதி அமைந்துள்ளதால் மேடையில் பிரதமருடன் அமரும் வாய்ப்பு விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.

மோடி

விழா தொடங்கியதும், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்பு உரை நிகழ்த்தினர். இதையடுத்து  பிரதமர் மோடி தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். கூடுதலாக மதுரை, தஞ்சாவூர், நெல்லையில் கட்டப்பட்டுள்ள  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தார் மோடி.

இதனைத்தொடர்ந்து ‘மதுரையில் உள்ள அனைவருக்கும் எனது வணக்கம்’ என தமிழில் தன் உரையைத் தொடங்கினார் பிரதமர். தொடர்ந்து பேசிய  அவர், “மதுரை மீனாட்சியம்மன் மண்ணுக்கு நான் வந்தது பெருமையாகவுள்ளது. மதுரை, தஞ்சை, நெல்லையில்  உயர் சிகிச்சை மையங்களைத் திறந்துவைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தனது சேவை மூலம் தனி இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் நான்கு திசைகளில் எய்ம்ஸ் அமையவுள்ளது. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் கன்னியாகுமரியில் உள்ளவர்களும் பயனடைய முடியும். நான்கு ஆண்டுகளில் மருத்துவ இடங்கள் 30% அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆண்டுக்குள்காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும். பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 100 மருத்துவ இடங்களும், 60 நர்சிங் இடங்களும் உருவாக்கப்படும். அனைவருக்கும்  மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. என்னுடைய அரசு மக்களுக்குச் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்” எனக் கூறி  முடித்தார். எய்ம்ஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் எதுவும் இடம்பெறவில்லை.