`10% இடஒதுக்கீடு பட்டியலினத்தவர்களை பாதிக்காது' - மதுரை பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு! | PM modi speech in bjp meeting at madurai

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (27/01/2019)

கடைசி தொடர்பு:13:47 (27/01/2019)

`10% இடஒதுக்கீடு பட்டியலினத்தவர்களை பாதிக்காது' - மதுரை பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்குப் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவப்படுத்தினர். 

அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொன்மையான மதுரை மாநகர தமிழ் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கினார். ``பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் சங்கத்தின் இருப்பிடமாக மதுரை இருந்து வருகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்து தொன்மையான பாரம்பாரியத்தின் அடையாளமாக மதுரை விளங்குகிறது. மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். 

சற்று முன்புதான் நான் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்விக்கான முக்கிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன். இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ஏழைகளுக்கு எளிய மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைகளாகவே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல மக்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். மேலும் இதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மிகப்பெரும் திட்டமாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் மட்டும் கட்டப்பட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் 35 ஆயிரம் கி.மீ தொலைவு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை உள்பட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. டி-18 விரைவு ரயில் திட்டம் தமிழகத்தில் தான் முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மத்திய அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று தான் 10 % இடஒதுக்கீடு வழங்கியது. இதனால் எஸ்சி, எஸ்.டி மக்களுக்குப் பாதிப்பு இருக்காது. சில சுயநல சக்திகள் இதை தமிழகத்தில் தவறாகப் பரப்பிவருகின்றனர். எனவே இளைஞர்களே நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் மக்கள் சிலர் என்னை வந்து சந்தித்து தன் வாழ்வியலை எடுத்துக்கூறி அதற்கு ஒரு நியாயம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதை நான் எஸ்.சி, எஸ்.டி கமிஷன் மற்றும் மாநில அரசிடம் கூறி இது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன். மாநில அரசு இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

செயற்கையாக நாம் ஏற்படுத்தியுள்ள உயர்வு தாழ்வு மற்றும் நம்மவர், மற்றவர் போன்றவற்றை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும். ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி வெளிநாடுகளில் இருந்தாலும் சரி. யார் என்ன செய்தாலும் நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன். எதிர்ப்பு சக்திகளை புறம் தள்ளுங்கள். அதை மட்டுமே மதுரை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் சொல்கிறேன்" என்றார்.