`தொழிலாளர்களுக்கு லீவ் கொடுக்கல!’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை | Action against 102 companies that violated rules in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (27/01/2019)

`தொழிலாளர்களுக்கு லீவ் கொடுக்கல!’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதிகளை மீறிச் செயல்பட்ட 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் உத்தரவின்பேரில், எடையளவு துணை கட்டுப்பாட்டு உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் தலைமையில் ‘குடியரசு தினமான’ நேற்று, மாவட்டம் முழுவதும் உள்ள 147 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ், குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. விடுமுறை நாளில் வேலை செய்வதால் இரட்டிப்பு சம்பளமும் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விதிகள் மீறியதாகக் 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 48 உணவு நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மாவட்ட தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.